2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்தது ஐ.நா

Editorial   / 2017 மே 26 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இராணுவக் கண்காணிப்பாளர்கள், இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகினர் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸின் பேச்சாளர் ஸ்டெபானி டுஜரிக் மறுத்துள்ளார்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் காணப்படும் ஐக்கிய நாடுகள் இராணுவக் கண்காணிப்பாளர் குழு என அழைக்கப்படும் இந்தக் குழுவின் வாகனம் மீது, கான்ஜர் பகுதியில் வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

எனினும், இதற்கான ஆதாரங்கள் கிடையாது என, செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

“பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்படும் காஷ்மிர் பகுதியிலுள்ள பிம்பெர் பகுதியில், இன்று (நேற்று முன்தினம்) பிற்பகல், பாகிஸ்தானிய இராணுவத்தினரால் அழைத்துக் கொண்டு செல்லப்பட்ட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் காணப்படும் ஐக்கிய நாடுகள் இராணுவக் கண்காணிப்பாளர் குழு, வெடிச் சத்தங்களைக் கேட்டது என்பதை நான் கூற முடியும். ஆனால், கண்காணிப்புக் குழுவினர், துப்பாக்கிச் சூட்டால் இலக்குவைக்கப்பட்டனர் என்பதற்கு, எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. ஐ.நாவின் எந்த இராணுவக் கண்காணிப்பாளரும் காயமடையவில்லை” என்று, அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள முரண்பாடு குறித்துக் கேள்வியெழுப்பப்பட்ட போது பதிலளித்த அவர், இது சம்பந்தமாக ஆராயவிருப்பதாகவும், காஷ்மிர் நிலைவரம் தொடர்பாக, செயலாளர் நாயகம், கரிசனை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, அறிக்கையொன்றை வெளியிட்ட பாகிஸ்தான் இராணுவம், இரண்டு கண்காணிப்பாளர்களைக் கொண்டு சென்ற வாகனம் மீது, இந்திய இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X