2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

புத்திசாலி வணிகர் என விமர்சனம்: ’காந்தியே சிரிப்பார்’

Editorial   / 2017 ஜூன் 11 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘புத்திசாலி வணிகர்’ என்று விமர்சனம் செய்த, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவைப் பார்த்து, மகாத்மா காந்தியே சிரிப்பார் என்று, மகாத்மா காந்தியின் பேரன் கூறியுள்ளார்.

ராய்ப்பூரியில், நேற்று (10) நடைபெற்ற நிழ்வொன்றின் போது, தேசிய காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்த அமித் ஷா, காந்தியை, புத்திசாலி வணிகர் என்றும் கூறியிருந்தார். குஜராத்தில், வணிகத்தில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை, ‘பனியா’ என்று குறிப்பிடுவார்கள். காந்தியும் பனியா வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், ‘சதுர் பனியர்’ (புத்திசாலி வணிகர்) என்று அவர் கூறியிருந்தார்.

அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்கு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் பேரனும் முன்னாள் மேற்கு வங்காள ஆளுநருமான கோபால கிருஷ்ணனும், இக்கருத்துக்குப் பதில் கூறியுள்ளார்.

“காந்தி, தன்னை விமர்சித்து வெளிவரும் கேலிச் சித்திரங்களைப் பார்த்துச் சிரிப்பார். அதே போல், அமித் ஷாவின் கருத்தைக் கேட்டிருந்தாலும், அதன் சுவையில்லாத தன்மை, மறைமுக தீய எண்ணம் ஆகியவற்றைக் கண்டு, குலுங்கிக் குலுங்கிச் சிரித்திருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலா கூறுகையில், “சாதியத்துக்கு எதிராகப் போராடாமல், நாட்டின் தேசபிதாவை (காந்தியை) கூட, சாதிக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். இதன் மூலம், பா.ஜ.கவின் குணம், சித்தாந்தம் வெளிப்பட்டுள்ளது. இவர்கள், நாட்டை எங்கு கொண்டு செல்லப் போகிறார்களோ?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேற்கு வங்காள முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘அமித் ஷா, தனது கருத்தைத் திரும்பப்பெற வேண்டும். தான் கூறியதற்காக, அமித் ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும். வேண்டுமென்றே தெரிவித்த துரதிர்ஷ்டவசமான, நெறியற்ற, வேண்டாத கருத்தாகும்” என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X