2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

‘பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டும்’

Editorial   / 2017 மே 30 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேடியப் பாடசாலைக் கட்டமைப்பில், பழங்குடியினச் சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டமையில், கத்தோலிக்கத் திருச்சபையின் பங்குக்காக, பாப்பரசர் பிரான்ஸிஸ், மன்னிப்புக் கோர வேண்டுமென, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாப்பரசரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜி7 உச்சிமாநாட்டுக்காக இத்தாலிக்குச் சென்ற பிரதமர் ட்ரூடோ, வத்திக்கானுக்குச் சென்று, பாப்பரசரைச் சந்தித்தார்.

சந்திப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் ட்ரூடோ, “பழங்குடியின மக்களோடு, உண்மையான நல்லிணக்கத்தை அடைவது, கனேடியர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அவருக்குக் கூறினேன். மன்னிப்பொன்றைக் கோருவதன் மூலம், அவர் எவ்வாறு உதவ முடியுமெனவும் நான் கூறினேன்” எனத் தெரிவித்தார்.

தனது மன்னிப்பை வழங்குவதற்கு, கனடாவுக்கு வருமாறு, பாப்பரசரைக் கனடாவுக்கு அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கனடாவில், வதிவிடப் பாடசாலைகள், 1880களில் அமைக்கப்பட்டன. பழங்குடியினச் சிறுவர்களை, தங்கள் குடும்பங்களிலிருந்து பிரித்து, கனேடியச் சமூகத்துடன் இணைப்பதற்காக அவர்களைத் தயார்படுத்துவதில், இப்பாடசாலைகள் ஈடுபட்டன. இதன் இறுதிப் பாடசாலை, 1996ஆம் ஆண்டில் மூடப்பட்டது.

சுமார் 150,000 பழங்குடியினச் சிறுவர்கள், தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, தேவாலயத்தால் நடத்தப்பட்ட பாடசாலைகளில் படிக்க வைக்கப்பட்டதோடு, தங்களது சொந்த மொழியைப் பேசுவதற்கோ அல்லது தங்களது சொந்தக் கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கோ, அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தப் பாடசாலைகளில், சிறுவர்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டனர் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .