2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மின்டனாவில் இராணுவச் சட்டம் பிரகடனம்

Editorial   / 2017 மே 24 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய ஆயுததாரிகளின் மறைவிடமொன்றின் மீதான தோல்வியில் முடிவடைந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மின்டனா மாகாணத்தில் இராணுவச் சட்டத்தை, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே பிரகடனப்படுத்தியுள்ளார்.   

மின்டனாவை, இராணுவச் சட்டத்தின் கீழ், நேற்று  (23) கொண்டுவந்த, ஜனாதிபதி டுட்டேர்ட்டே, தேவைப்பட்டால், இராணுவச் சட்டத்தை, ஓராண்டுக்குப் பேணுவேன் எனக் கூறியுள்ளார்.  

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் மீது, நேற்று இடம்பெற்ற, தோல்வியில் முடிவடைந்த நடவடிக்கையொன்றில் தப்பிய மெளட்டே குழுவைச் சேர்ந்த டசின் கணக்கான போராளிகள், வீதிகளையும் பாலங்களையும் கட்டடங்களையும் கைப்பற்றி, இராணுவத்துக்கான வழங்கல்களை முடக்க எதிர்பார்க்கையில், பிரதானமாக முஸ்லிம் நகரான மறாவியில், அவர்களைக் கட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ள படைகள், மோதலில் ஈடுபட்டுள்ளன.   

கட்டடங்களைக் கைப்பற்றிய மெளட்டே போராளிகள், பாடசாலையொன்றையும் தேவாலயமொன்றையும் சிறைச்சாலையொன்றையும் எரித்த நிலையில், படைவீரர்கள் இருவரும் பொலிஸார் ஒருவரும் கொல்லப்பட்டதோடு, 12 பேர் காயமடைந்துள்ளனர்.   

மோதல்கள் தொடர்பாக, சில தகவல்களையே, இராணுவமும் அரசாங்கமும் வழங்கியுள்ளதோடு, போராளிகள் எவராவது கொல்லப்பட்டனரா என்றும் தெரிவிக்கவில்லை.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், மறாவியிலிருந்து வருபவர்கள், மறாவி, போராளிகளின் கைகளில் வீழ்ந்துள்ளதாகவும், பொதுமக்களை வெளியேற அவர்கள் அனுமதித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.   

நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது, கடற்கொள்ளை, மேற்கத்தேய நாட்டவர்களைக் கடத்துகின்ற, தலையைத் துண்டிக்கின்ற அபு சயாப் குழுவின் தலைவர்களிலொருவரான இஸ்னிலோன் ஹபிலொனை கைப்பற்றும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறுதியாக இடம்பெற்ற மோதலில், ஹபிலொன் காயமடைந்ததாக தாம் நம்புவதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X