2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்யத் தலையீடு: இரகசியத் தகவலை வெளியிட்டவர் சிக்கினார்

Editorial   / 2017 ஜூன் 06 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில், கடந்தாண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, தலையீடுகளை மேற்கொள்வதற்கு ரஷ்யா மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான, இரகசியத் தகவல்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டில், பாதுகாப்புப் பிரிவு அதிகாரியொருவர், ஐ.அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான றியலிட்டி லேக் வின்னர் என்ற குறித்த ஊழியர், ஜோர்ஜியா மாநிலத்திலுள்ள அரச அலுவலகத்திலிருந்தே, குறித்த இரகசியத் தகவலைக் கசியவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு முகவராண்மை, கடந்த தேர்தலில் ரஷ்யத் தலையீடு சம்பந்தமாகக் கொண்டிருந்த அறிக்கையொன்றை, ஊடகமொன்று பிரசுரித்த பின்னரே, இந்தக் கைது இடம்பெற்றது. குறித்த ஊழியர், இம்மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டார் என, அதிகாரிகள், நேற்று உறுதிப்படுத்தினர்.

குறித்த ஊடகச் செய்தியின் அடிப்படையில், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னர், வாக்களிப்புக்கான மென்பொருட்களை விநியோகிக்கும் ஆகக்குறைந்தது ஒரு நிறுவனம் மீது, ரஷ்யாவால், இணையவழித் தாக்குதல் நடத்த முயலப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்தோடு, உள்ளூர் தேர்தல் அதிகாரிகளில், 100 பேருக்கும் மேற்பட்டோருக்கு, மின்னஞ்சல்களை அனுப்பி, அதில் காணப்படும் சுட்டியில் அவர்களை அழுத்த வைப்பதன் மூலம், தகவல்களைத் திருடுவதற்கும், ரஷ்யா முயன்றது என்று கூறப்படுகிறது.

குறித்த ஊழியர், ஒப்பந்த அடிப்படையில், இவ்வாண்டு ஜனவரியிலிருந்து, ஜோர்ஜியாவில் பணியாற்றி வந்துள்ளார். “பாதுகாப்புத் தகவல்களைச் சேகரித்தல், பரப்புதல், அல்லது தொலைத்தல்” என்ற குற்றச்சாட்டு, அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் தலையிடுவதற்கு, ரஷ்யா முயன்றது என்றது குற்றச்சாட்டை, பொய்யான செய்தி என வர்ணித்துவரும், ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், தகவல்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டு, ஒருவர் மீது உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளமை, இதுவே முதற்தடவையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .