2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

லாகூர் தாக்குதல்: 'கிறிஸ்தவர்களை இலக்குவைத்தோம்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 28 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் லாகூரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரத் தாக்குதலை, தாமே மேற்கொண்டதாக, பாகிஸ்தானிய தலிபான் குழு உரிமை கோரியுள்ளது. கிறிஸ்தவர்களை இலக்கு வைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, அக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

லாகூரிலுள்ள பிரபலமான பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டிருந்ததோடு, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இந்தத் தாக்குதலை, தலிபான்களே மேற்கொண்டிருப்பர் என முன்னர் கருதப்பட்டது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள தலிபான் குழுவான ஜிமாட்-உல்-அஹ்ரரின் பேச்சாளர் இசானுல்லா இஷான், 'கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து, லாகூர் தாக்குதல்களை நாம் மேற்கொண்டோம்" என உறுதிப்படுத்தியதோடு, அவ்வாறான தாக்குதல்களைத் தொடர்ந்தும் நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, பாடசாலைகள், கல்லூரிகள் ஆகியன உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல் நடக்கும் என அவர் எச்சரித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, அந்தப் பூங்காவில், வழக்கத்தை விட அதிகமானோர் ஒன்றுகூடியிருந்த நிலையிலேயே, பூங்காவின் வாகனத் தரிப்புப் பகுதியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது. சிறுவர்கள் விளையாடும் பகுதிக்கு சில அடிகள் தள்ளியும் மக்கள் வெளியேறும் வாசலுக்கு வெளியேயும் காணப்படும் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், சிறுவர்களும் பெண்களும், அதிகளவில் சிக்கியிருந்தனர். ஏராளமானோர் காயமடைந்திருந்த நிலையில், அவர்களனைவரையும் அனுமதிக்குமளவுக்கு, வைத்தியசாலையில் இடம் காணப்பட்டிருக்காததோடு, இரத்தத்துக்கும் தட்டுப்பாடு நிலவியிருந்தது.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ள போதிலும், மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மையைக் கண்டறியும்வரை, தலிபான்களின் உரிமை கோரலை உறுதிப்படுத்த முடியவில்லை என, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், 'அப்பாவி உயிர்களின் கவலைதரும் இழப்புக் குறித்துக் துக்கமும் துயரமும் அடைகிறேன்" எனத் தெரிவித்தார்.

பேஸ்புக் வசதி
குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடத்துக்கு அருகில் வசிப்போர், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை, தங்களது பேஸ்புக் நண்பர்களுக்கு அறிவிக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் கட்டமைப்பைச் (safety check) செயற்படுத்தியிருந்தது. எனினும், ஏற்பட்ட தொழில்நுட்பத் தவறு காரணமாக, பாதுகாப்பாக இருப்பது குறித்த தகவல், நண்பர்களுக்கு மாத்திரமன்று, உலகிலுள்ள அனைவருக்கும் சென்றிருந்தது. இதற்கு, பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X