2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கூடங்குளம் அணு உலை: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Kogilavani   / 2012 நவம்பர் 21 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள 40 கிராமங்களிலும் ஆபத்துக் கால தற்காப்பு பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள 40 கிராமங்களிலும் அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு தொடர்பாக, இதுவரை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? மேலும் எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது, ஆபத்துக் கால தற்காப்பு பயிற்சிகள் ஒரு கிராமத்தில் மட்டுமே நடத்தப்பட்டிருப்பதாக, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டினார்.

அந்த கருத்தை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், இரண்டு கிராமங்களுக்கு சேர்த்து ஒரே இடத்தில் பயிற்சி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் நீதிவான்கள் குழு அதனை ஏற்க மறுத்தது. கூடங்குளம் அணு உலையைச் சுற்றி 16 கிலோ மீற்றர் சுற்றளவில் உள்ள 40 கிராமங்களிலும் இதுபோன்ற பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், அணு உலை செயல்பட துவங்குவதற்கு முன்னதாக அந்த பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அத்தகைய பயிற்சிகள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பொதுமக்கள் பாதுகாப்பை பொருத்தவரை, எந்த சமரசமும் செய்ய முடியாது என்றும், அதுதொடர்பாக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள், இனி எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .