2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கனடா நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல்: ஒபாமா, மோடி கண்டனம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கனடாவில் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து தீவிரவாதிகள் நேற்று நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். தலைநகர் ஒட்டவாவில் நடைபெற்ற இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகே உள்ள போர் நினைவுச் சின்னம் மற்றும் ஒரு ஷாப்பிங் மால் ஆகியவை மீதும் இந்தத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று வெளிநாட்டு செய்தி தெரிவிக்கின்றது.

கனடாவின் தலைநகரமான ஒட்டவாவில் உள்ள அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இருவர் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் அவர்கள் மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேசிய போர் பாதுகாப்பு நினைவக சின்னத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு வீரர் பலியானார். பதில் தாக்குதலில் தீவிரவாதி ஒருவரும் பலியானார். தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது நாடாளுமன்ற அரங்குக்குள் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இருந்தாகவும், பின்னர் அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.

துப்பாக்கிச் சூடுத் தாக்குதலைத் தொடர்ந்து கனடா நாடாளுமன்ற பகுதி முழுவதும் உடனடியாக மூடப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொரு மர்ம நபர், நாடாளுமன்ற வளாகத்திலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, அவரைக் கைது செய்ய ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் குண்டு துளைக்காத உடைகள் அணிந்து அரங்கிற்குள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கும் முன் கியூபெக் நகரத்தில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் மீது மர்ம நபர் காரை விட்டு ஏற்றிச் சென்ற சம்பவமும் நடைபெற்றது. இதில் ஒரு வீரர் பலியானார். இன்னொருவர் பலத்த காயமடைந்தார். இந்த கார் தாக்குதலே தீவிராத செயலாக இருக்கும் அதிகாரிகள் கருதி வந்த நிலையில், பொதுவாக அமைதியாக காணப்படும் கனாடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் இந்த தீவிரவாதி சம்பவம் நடைபெற்றுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி

கனடாவின் தலைநகரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இத்தாக்குதல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். அதில் அவர், 'ஒட்டவா தாக்குதல் சம்பவம் கடுமையான வேதனை அளிக்கிறது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமா கண்டனம்

கனடா நாட்டின் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

'கனடா நாட்டின் நாடாளுமன்ற வளாகத்திற்குள் மர்மநபர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக கனடா நாட்டிற்கு துணை நிற்போம்' என தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .