2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

அல்-கொய்தாவுடன் ஹக்கானி வலையமைப்பு புதிய பிரிவு?

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்தாண்டு மார்ச் மாதம் காபூலில் சீக்கியர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குக் குற்றஞ்சாட்டப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஹக்கானி வலையமைப்பு, அல்-கொய்தாவுடன் புதிய இணைந்த பிரிவு அமைப்பது குறித்து விவாதித்ததாக ஐக்கிய அமெரிக்கா திறைசேரி ஆவணம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் எல்லை தாண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானை மய்யமாகக் கொண்ட அமைப்பு ஹக்கானி வலையமைப்பு என குறித்த ஆவணம் விவரித்துள்ளது.

பயங்கரவாத நிதியளிப்பு, பணச்சலவைக்கெதிரான அதன் மதிப்பீட்டில், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் ஐ. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்ட பிறகும், ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அல்-கொய்தாவுடன் பேணிய நெருக்கமான தொடர்புகள் பற்றிய தகவல்களையும் இவ் ஆவணம் வெளிப்படுத்தியுள்ளது.

காபூலில் சீக்கிய வழிபாட்டிடத்தில் ஏறத்தாழ 30 பேரைக் கொன்ற கடந்தாண்டுத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானின் இன்டர்-சேர்வீசஸ் புலனானாய்வு (ஐ.எஸ்.ஐ) முகவரகத்தின் உண்மையான கை என்று ஐ. அமெரிக்க பணியாட்தொகுதியின் முன்னாள் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் ஒரு முறை பிரபலமாக விவரித்த ஹக்கானி வலையமைப்பு, லஷ்கர்-இ-தைபா (எல்.இ.டி) உடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அல்-கொய்தாவின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவியுடன் ஆயுதமேந்திய போராளிகளின் புதிய இணைந்த பிரிவை உருவாக்குவது குறித்து சிரேஷ்ட ஹக்கானி வலையமைப்பு புள்ளிகள் விவாதித்தனர் என்று ஐ. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்துக்கு, கடந்த மாதம் நான்காம் திகதியிட்ட ஆவணத்தில் தெரிவித்தபோதும், மேலதிக விவரங்களைத் தரவில்லை.

ஆப்கானிஸ்தானில் இந்திய நலன்களை குறிவைப்பதாக ஹக்கானி வலையமைப்பு பெரும்பாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை பயங்கரவாதிகள் குறிவைக்க முடியாமல் போனதால் சீக்கியர்கள் மீது கடந்தாண்டு மார்ச் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹக்கானி வலையமைப்பு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் எட்டு உறுப்பினர்களை சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்காக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் காபூலில் கடந்தாண்டு மே மாதம், கைது செய்தனர். ஷியா ஹஸாரா சிறுபான்மையினரின் ஒன்றுகூடலொன்றுக்கும், ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் பதவியேற்பு விழா மற்றும் பக்ரம் வான்தளத்தின் மீது றொக்கெட் தாக்குதல்களுக்கும் ஹக்கானி வலையமைப்பே பொறுப்பாகும் என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் அல்லது ஆப்கானிஸ்தான் உளவு முகவரகம் அப்போது தெரிவித்திருந்தது.

இந்திய துணைக் கண்டத்திலுள்ள அல்-கொய்தா பிரிவு உள்ளிட்ட அல்-கொய்தாவின் கூறுகளும், பாகிஸ்தானை இலக்கு வைக்கும் பயங்கரவாதக் குழுக்களான தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) ஆகியன ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியைத் தொடர்ந்து பாதுகாப்பு புகலிடமொன்றாக பயன்படுத்துவதாக மேற்குறித்த ஆவணம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் கவனம் செலுத்த முயன்ற AQIS, அல்-கொய்தாவின் சிரேஷ்ட தலைமையிலிருந்து நிதியுதவி பெறக்கூடும் என்று ஐ. அமெரிக்க திறைசேரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் மய்யமானது வெளிநாடுகளில் இருந்து நிதியை மாற்ற ஹவாலா வலையமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளது என்றும், ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் கொரோசான் பிரிவு அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ்-கே ஆகியவை குறித்த குழுக்களுக்காக ஆயிரக்கணக்கான ஐ. அமெரிக்க டொலர்களை சேமித்து வைத்திருக்கும் ஹவாலாக்காரர்களுடன் உறவுகளை வளர்த்துள்ளன என்று திறைசேரித் திணைக்களம் இறுதி செய்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .