2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

எதியோப்பியாவில் ஆர்ப்பாடங்கள்: ’உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்தது’

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதியோப்பியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அபி அஹ்மட் நேற்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க அச்சுறுத்தும் சக்திகளை பிரஜைகள் எதிர்க்க வேண்டும் என பிரதமர் அபி அஹ்மட் வலியுறுத்தியுள்ளார்.

அரசுடன் இணைந்த பனா ஒளிபரப்பால் ஒளிபரப்பப்பட்ட உள்ளூர் செய்தி நிறுவனங்களுடனான செய்தியாளர் மாநாடொன்றிலேயே குறித்த கருத்தை பிரதமர் அபி அஹ்மட் வெளிப்படுத்தியிருந்தார்.

எதியோப்பியாவின் தலைநகர் ஆதிஸ் அபபாவிலுள்ள தனது வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாகவும், தனது அரசாங்கப் பாதுகாப்பை மீளப் பெற முயல்வதாகவும் செயற்பாட்டாளர் ஜாவார் மொஹமட் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 23, 24ஆம் திகதிகளில அவரின் ஆதரவாளர்கள் வீதிகளில் திரண்டிருந்தனர்.

கடந்த வாரயிறுதியில் 78 பேரே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், புதிய எண்ணிக்கையில் 82 ஆண்களும், நான்கு பெண்களும் உள்ளடங்குவதாக பிரதமர் அபி அஹ்மட் கூறியுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் ஒறோமோ, அம்ஹரா இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் உள்ளடங்குவதாக பிரதமர் அபி அஹ்மட் தெரிவித்துள்ளார்.

எதியோப்பியாவின் மிகவும் சனத்தொகை கூடிய மாகாணமான ஒறோமியாவின் சில நகரங்களிலும் கடந்த மாதம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தான் 2018ஆம் பிரதமராக நியமிக்கப்பட்டதிலிருந்து அரசிய சீர்திருத்தங்களை அபி அஹ்மட் முன்னெடுத்திருந்த நிலையில், நீண்டகால எதிரிநாடான எரித்திரியாவுடனான 20 ஆண்டுகள் முறுகலை முடிவுக்கு கொண்டு வந்த சமாதான நடவடிக்கைகளுக்காக அமைதிக்கான நொபெல் பரிசை கடந்த மாதம் வென்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .