2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

ஜேர்மனியில் அரசியல் நெருக்கடிக்கு வாய்ப்பு

Editorial   / 2017 நவம்பர் 21 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள், ஜேர்மனியில் நேற்று (20) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போதைய சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தன்னுடைய அரசியல் எதிர்காலத்துக்கான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜேர்மனியில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படக்கூடும்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மன், அடுத்த சில வாரங்களுக்கு - சில வேளைகளில் மாதங்களுக்கு - அதிகாரமற்ற அரசாங்கம் போன்று செயற்பட வேண்டியுள்ளது. எனவே, முக்கியமான அரசியல் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புக் காணப்படவில்லை.

ஜேர்மனில், இவ்வாண்டு செப்டெம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், சான்செலர் மேர்க்கெலின் ஆளும் கூட்டணிக்கு முன்னணி கிடைக்கப்பெற்ற போதிலும், அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. எனவே, கூட்டணி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

பெரும்பான்மைக்கு 335 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், மேர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி, 246 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. அவரது கட்சியோடு இணைந்து காணப்பட்ட சமூக ஜனநாயகக் கட்சி, 153 ஆசனங்களைப் பெற்ற போதிலும், தேர்தலில் பெறப்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, கூட்டணியில் அங்கம் வகிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தது. இதனால் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடனும் பசுமைக் கட்சியுடனும் இணைந்து, புதிய கூட்டணிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அக்கூட்டணிக்கான முயற்சிகளே தோல்வியடைந்துள்ளன.

எனவே தற்போதைய நிலையில், சமூக ஜனநாயகக் கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். ஆனால் அது தோல்வியடைந்தால், மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்படலாம்.

அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமாயின், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைத் தலைமை தாங்குவதற்கு, மேர்க்கெல் பொருத்தமானவர் தானா என்ற கேள்விகளும் காணப்படுகின்றன. அவ்வாறு அந்த வாய்ப்பை அவர் இழப்பாராயின், 4ஆவது தடவையாகவும் சான்செலராகப் பதவியேற்கும் வாய்ப்பை அவர் இழப்பார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X