2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நாளை வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாடு சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் வெற்றிடமாக உள்ளன.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, நாங்குநேரி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எச். வசந்தகுமார், நாடாளுமன்ற கீழ்ச்சபைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானதால் தனது சட்டசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராதாமணி உடல்நலக் குறைவால் இவ்வாண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி மரணம் அடைந்தார்.

இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் வெற்றிடமானதாக அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் (அ.இ.அ.தி.மு.க) கூட்டணியின் பலம் 123 ஆகவும், தி.மு.க கூட்டணியின் பலம் 108 ஆகவும் உள்ளது. சுயேச்சை சட்டசபை உறுப்பினராக டி.டி.வி தினகரன் உள்ளார்.

இந்நிலையிலேயே வெற்றிடமாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா நேற்று முன்தினம் அறிவித்தார். இடைத்தேர்தல் அட்டவணையையும் அப்போது அவர் வெளியிட்டார்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குவதுடன், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இம்மாதம் 30ஆம் திகதி ஆகும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அடுத்த மாதம் முதலாம் திகதி நடக்கிறது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஆகும். பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 24ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X