2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

ஹிலாரி பற்றிய தகவல்களுக்காக ரஷ்யரைச் சந்தித்தார் ட்ரம்ப்பின் மகன்

Editorial   / 2017 ஜூலை 10 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், கடந்தாண்டில், ரஷ்ய சட்டத்தரணியொருவரைச் சந்தித்தார் என்ற செய்தி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது வேட்பாளராக இருந்த ஹிலாரி கிளின்டனைச் சேதப்படுத்தும் வகையிலான தகவல்கள் உள்ளன என, அந்தச் சட்டத்தரணி கூறியதைத் தொடர்ந்தே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியின் அடிப்படையில், ட்ரம்ப் கோபுரக் கட்டடத்தில் வைத்து, கடந்தாண்டு ஜூன் 9ஆம் திகதி, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டு 2 வாரங்களின் பின்னர், இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஹிலாரி கிளின்டன் பற்றிய தகவல்கள் உள்ளன என, குறித்த சட்டத்தரணிக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கும் பொதுவான நட்பு ஒருவர், இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் அவர், ரஷ்யாவுடன் தொடர்புடைய நபர்கள், ஜனநாயகக் கட்சியின் தேசிய செயற்குழுவுக்கு நிதியளிப்பதாகவும் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், அப்போது ட்ரம்ப்பின் பிரசாரக் குழுத் தலைவராக இருந்த போல் மனஃபோர்ட், ட்ரம்ப்பின் மருமகன் ஜரெட் குஷ்னர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பான செய்தி வெளியானதும், அறிக்கை ஒன்றை வௌயிட்ட ட்ரம்ப் ஜூனியர், அந்தச் சந்திப்பு நடைபெற்றதை உறுதிப்படுத்தினார். ஆனால், பிரசாரம் பற்றிய சந்திப்பாக அது அமைந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

எனினும், மீண்டுமோர் அறிக்கையை வெளியிட்ட அவர், ஹிலாரி கிளின்டன் தொடர்பான தகவல்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டமையின் காரணமாகவே, இச்சந்திப்பில் கலந்துகொள்ளத் தீர்மானித்தார் என்று ஏற்றுக் கொண்டார். எனினும், அந்தச் சட்டத்தரணி தெரிவித்த தகவல்கள், எந்தவிதப் பெறுமதியும் இல்லாதனவாக இருந்தன என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பை ஜனாதிபதியாக்குவதற்கு, ரஷ்யா விரும்பியது என, புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கும் நிலையில், ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவும் ரஷ்யாவும், ஹிலாரியை வீழ்த்துவதற்காக இணைந்து செயற்பட்டனவா என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கு மத்தியில், ரஷ்ய சட்டத்தரணி ஒருவருடன், வேட்பாளர் ட்ரம்ப்பின் மகன் சந்தித்தமை, அதுவும் ஹிலாரி கிளின்டன் சம்பந்தமான தகவல்களைப் பெறுவதற்காகச் சந்தித்தமை என்பது, அது தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X