2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

றோயலைப் பந்தாடிச் சம்பியனானது இசிப்பத்தன

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதிக் கிண்ணத்துக்கான 20 வயதுக்குட்பட்டோருக்கான நொக்-அவுட் றக்பி கிண்ணத் தொடரின் சம்பியன்களாக, இசிப்பத்தன கல்லூரி அணி தெரிவாகியுள்ளது. றோயல் கல்லூரி அணியை மிக இலகுவாகத் தோற்கடித்தே, இத்தொடரின் சம்பியன்களாக இசிப்பத்தன கல்லூரி அணி தெரிவாகியது.

தொடரின் மிகவும் சிறந்த இரண்டு அணிகள் மோதிய இந்தப் போட்டி, மிகவும் விறுவிறுப்பாக அமையுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், றோயலுக்கெதிரான ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டை வெளிப்படுத்திய இசிப்பத்தன, அந்த எதிர்பார்ப்புகளைச் சிதறடித்தது.

இப்போட்டி, றெய்ட் அவெனியூவிலுள்ள சர்வதேச குதிரைப் பந்தயத் திடலில், நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது.

ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு விளையாடிய இசிப்பத்தன அணி, ஆரம்பத்தில் றோயலின் வாய்ப்புகளைத் தடுத்து நிறுத்தியதோடு, பின்னர் சமுது றன்கொத்கேவின் ட்ரை மூலமாகவும் அதன் மூலமாக கயான் விக்ரமரத்னவின் மேலதிக புள்ளிகளூடாகவும், 7-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையைப் பெற்றது.

பின்னர், அணியாக இணைந்து மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, றன்டி சில்வாவினால் ட்ரை ஒன்று பெறப்பட, 12-0 என நிலைமை மாறியது. பின்னர் கிடைத்த வாய்ப்பொன்றைச் சரியாகப் பயன்படுத்திய றோயல் கல்லூரியின் அஷோக் விஜேகுமார், 5 புள்ளிகளைப் பெற்றதோடு, மேலதிக புள்ளிகளை ஒவின் அஸ்கி பெற்றுக் கொடுத்தார். இதனால், 12-7 என்ற கணக்கில் புள்ளிகள் நிலை காணப்பட்டது. முதற்பாதி முடிவடைவதற்குச் சில நிமிடங்களே இருந்தபோது, இசிப்பத்தன அணியின் தலைவர் குஷான் இந்துனில் பெற்ற ட்ரை, கயான் விக்ரமரத்னவின் மேலதிக புள்ளிகள் காரணமாக, 19-7 என்ற முன்னிலையைப் பெற்றது.

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இசிப்பத்தன கல்லூரி, றன்டி சில்வாவின் மற்றொரு ட்ரை, கயான் விக்ரமரத்னவின் மேலதிக புள்ளிகள் காரணமாக, ஆரம்பத்திலேயே 26-7 என்ற புள்ளிகள் நிலையை அடைந்தது. ஆனால், இசிப்பத்தன அணியின் இரண்டு வீரர்கள், சில நிமிட இடைவெளியில் மைதானத்துக்கு வெளியே அனுப்பப்பட, 13 பேர் கொண்ட அணியாக மாறியது. இதைப் பயன்படுத்திய றோயலின் அஸ்மிர் பாஜுதீன், ட்ரை ஒன்றைப் பெற்றார்.

சிறிது நேரத்தில், றோயலில் பாஜுதீன், மைதானத்துக்கு வெளியே அனுப்பப்பட, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய இசிப்பத்தன அணியின் சுமுது றன்கொத்கே, ஒரு ட்ரையைப் பெற்றதோடு, மேலதிக புள்ளிகளும் பெறப்பட்டன. சில நிமிடங்களின் பின்னர், றன்டி சில்வா மூலமாக மற்றொரு ட்ரையைப் பெற, கயான் விக்கிரமரத்னவால் மேலதிக புள்ளிகள் பெறப்பட்டன. இதனால், 40-12 என்ற புள்ளிகள் கணக்கில், இசிப்பத்தன முன்னிலை பெற்றது. போட்டி முடிவடைவதற்குச் சில நிமிடங்கள் முன்னதாக, றனிது பிரமோத் பெற்ற ட்ரை காரணமாகவும், மேலதிக புள்ளிகள் காரணமாகவும், 47-12 என்ற புள்ளிகள் கணக்கில், இசிப்பத்தன அணி, இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .