2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

Art + Harmony – 03

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தமிழ் கலைத்துறையில் எனக்குத் தெரிந்து மூன்று தலைமுறையினர் பங்காற்றி வருகின்றனர். என்னை வைத்துப் பார்த்தால் எங்கள் தலைமுறை, எங்களுக்கு முன்னைய தலைமுறை மற்றும் எங்களுக்குப் பின்னர் வந்த தலைமுறை என்று மூன்று தலைமுறையினரின் பங்களிப்போடு இலங்கை சமகால தமிழ்க் கலைத்துறை ஏற்ற, இறக்கங்களோடு வழமைபோல பயணித்துக்கொண்டிருக்கின்றது. 
 
எங்கள் தலைமுறையினருக்குத் தெரிந்த எங்களின் மூத்தவர்கள் பற்றிய வரலாறு எங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு சரியான முறையில் கடத்தப்படாமையால் தலைமுறை இடைவெளி என்பது மிகப்பெரும் குறைபாடாய் உருவெடுத்து வருகிறது. 
 
காலத்தை வென்று நிற்கும் கலைகளை நினைவில் வைத்திருந்தாலும் அதைப் படைத்த கலைஞன் மறக்கப்பட்டு விடுதல் சர்வசாதாரணமாய் நிகழும் ஒன்று. துறையில் பிரகாசிக்கும் போது இருக்கும் வீரியமான ரசிகர்களின் அரவணைப்பு துறையிலிருந்து ஓய்வுபெற ஆரம்பிக்கும் போது தொய்வடையத் தொடங்கிவிடுகிறது. 
 
இலங்கைக் கலையுலகைப் பொறுத்த வரையில் எந்த ஒரு தமிழ்க் கலைஞனும் கலைகளால் சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்ததாக எல்லாம் பெரிய சரித்திரங்கள் இல்லை. சோகங்களைச் சேர்த்து வைத்த கதைகளே அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கான ஒரே மன ஆறுதல் அவர்கள் செய்து வைத்த கலைச் சாதனைகளுக்காக இறக்கும் வரை தமக்குக் கிடைக்கும் அங்கிகாரமும் தங்களைப் பற்றிய தகவல்கள் அடுத்த தலைமுறைக்கும் போய் சேரவேண்டும் என்ற ஆவலும் தான்.
 
அந்த வேலையைக்கூட நாங்கள் ஒழுங்காகச் செய்துவைக்கவில்லை என்பது மிகப்பெரிய குற்ற உணர்வு. 
 
இவ்வருட முற்பகுதியில் சென்னை சென்றிருந்த போது இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சென்னையில் சொந்தமாக கலையகம் வைத்து நடத்திக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் சாயேஷ் கண்ணனை சந்திக்கச் சென்றிருந்தேன். நாங்கள் இருவரும் முகப்புத்தகத்தின் மூலம் அறிமுகமானவர்கள். அவரது கலையகம் சென்றபோது 'இவர்தான் என் தந்தை கண்ணன் மாஸ்டர் கேள்விப்பட்டிருப்பீங்களே?' என்று தன் தந்தையை அறிமுகம் செய்து வைத்தார். 'ஓ.. அப்பாவும் இசைக்கலைஞர் தானா?' என்று நான் கேட்க 'ஆமாம் கண்ணன் - நேசம் இரட்டையர்கள் பற்றி தெரியுமா?' என்று கண்ணன் மாஸ்டர் கேட்டவுடனே தான் எனக்கு நான் யாரோடு பேசிக்கொண்டிருக்கின்றேன் என்கிற தெளிவு வந்தது. இலங்கை தமிழ் இசைத்துறையிலும் சினிமாத்துறையிலும் சாதனைகள் புரிந்த அதே கண்ணன் மாஸ்டர் என்ற ஜாம்பவானுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்கிற ஆச்சரியம் மாறாமல் நீண்ட நேரம் அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.
 
தங்கள் காலம் நிறைவடைந்தது. தங்களின் சாதனைகள் பற்றிய எந்தப் பதிவும் இன்றி அவை வெகுவிரைவில் மறக்கப்பட்டுவிட்டன என்கிற வலி அவரது பேச்சில் இருந்ததை உணரக்கூடியதாய் இருந்தது. நாங்கள் பாடசாலை புறப்படும் காலை வேளைகளில் இலங்கை வானொலியில் ஒலிக்கும் அவரின் பாடல்கள் பற்றி அவரிடமே நான் பேசிய தருணங்கள் மறக்க முடியாதவை.
 
தன்னைப் பற்றிய எந்த ஆவணப்படுத்தல் நிகழ்ந்தாலும் அதற்கான பூரண ஒத்துழைப்பைத் தருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார். அவருடன் எடுத்துக்கொண்ட படத்தை முகப்புத்தகத்தில் பகிர்ந்து சுருக்கமாக அந்தச் சந்திப்பு பற்றி எழுதியதற்கே பலர் முகப்புத்தகத்திலும் தொலைபேசியிலும் அழைத்து அவரைப்பற்றி நலம் விசாரித்ததை அவர் மகன் வாயிலாக அவருக்குத் தெரியப்படுத்தினேன்.
 
மறக்கப்பட்ட இலங்கை தமிழ்கலை வரலாறு முறையாக பதிவுசெய்யப்பட வேண்டும். அது ஒன்றே காலம் கடந்து நம் கலைஞர்களை வாழ வைக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சி!
 
கண்ணன் மாஸ்டரின் இசையில் வெளிவந்த சில பாடல்கள்...

சம்மதமா சொல்லி தரவா.....

இளவேனிலே மன வானிலே...

கனி இதழ் அசைவினில்...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .