2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஓ... நீர் தான் ஆண்டவரோ? கமல் ஸ்பெஷல்

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமல் பிறந்தநாளுக்காக ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டரைப் பார்க்க நேர்ந்தது. ‘ஆண்டவரே’ எனப் பெரிய எழுத்துகளால் நிறைந்திருந்த அந்த போஸ்டரில் முழுக்க முழுக்க அவரது அரசியல் கட்சியினரின் படங்கள். 

இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்று பார்த்தால், ‘கலை உலகின்’ என்ற வார்த்தைகளை சிறுசாகப் போட்டிருக்கிறார்கள். ‘கலை உலகின் ஆண்டவரே’ என அவரது கட்சி அபிமானிகளாலேயே இன்றுவரை கமல்ஹாசன் அழைக்கப்படுகிறாரே ஏன்?

கமலின் மொழி

60 வருடங்கள் திரைத் துறையில் இருந்து பல சாதனைகளைப் படைத்த கமல்ஹாசனின் திறமை இன்னதென்று ஒரு கட்டத்துக்குள் அடைத்துவிட முடியும் என்றால், அவருக்குப்பின் வந்த கலைஞர்கள் அதைச் செய்து கமலைப் பின்னுக்குத் தள்ளியிருப்பார்கள் சுலபமாக. ஆனால், அதற்கு வழிவிடாமல் அத்தனை தளங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்திருக்கிறார் கமல். 
60 வருடங்களில் கமல் நடித்த எந்த கேரக்டரைச் சொல்லி அதன்படி நடிக்கச் சொன்னாலும் கமலால் அந்த கேரக்டரை உணரவைக்க முடியும். காரணம், ஒவ்வொரு கேரக்டருக்குமென தனித்தனி மொழிகளைக் கையாண்டு தனித்துவமாக நிற்கவைத்திருக்கிறார் கமல்.

படத்தில் நடித்தது ஒரே ஒரு கேரக்டர் என்றாலும், அந்த கேரக்டர் வீட்டில் பேசும் மாடுலேஷன் ஒரு மாதிரியும், வெளியில் இருக்கும் காட்சிகளில் மாடுலேஷன் வேறு மாதிரி இருக்கும்படியும் அந்த கேரக்டரை வெளிப்படுத்துவது அவரது தனி இயல்பு. 

அண்மையில் கமல் கலந்துகொண்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தசாவதாரம் படத்தில் அவர் நடித்த பத்து கேரக்டர்களின் குரலிலும், வெவ்வேறு கேரக்டர்களின் வசனங்களைப் பேசச்சொல்லி ஒரு டாஸ்க் கொடுத்தார்கள். எவ்வித சங்கடமும் இல்லாமல், வசனம் தோன்றிய ஐந்தாவது நொடி அதே குரலில் அப்படியே பேசிக்காட்டினார் கமல்.

கமலின் ஒவ்வொரு பட கேரக்டரையும் இப்படி தனித்தனியாகப் பிரித்துவிடலாம் எனும்போதுதான் அவர் நடிகன் என்று சொல்லப்படாமல் கலைஞன் என்று போற்றப்படுகிறார். இதற்காக அவரை ஆண்டவர் என்று சொல்லிவிடலாமா என்றால், இல்லை.

கமல் எனும் அப்டேட் மெஷின்

அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் வரும். ஹோட்டல் ரூமில் பேசிக்கொண்டிருக்கும்போது, “என்ன உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியுமா?” என்று மாதவன் கேட்க, “கற்றது கையளவு; கல்லாதது செல்லளவு” என்று ஒரு வசனம் பேசுவார் கமல். படம் ரிலீஸாகி 13 வருடங்கள் ஓடிவிட்ட இன்றைய நிலையில் நமது உலகமே ஒரு செல்போனுக்குள் சுருங்கிவிட்ட நிலையில் அன்றே கமல் யோசித்தது சரியென ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. 

அன்பே சிவம் படம் நஷ்டமடைந்தபோது, “புரிந்துகொள்ளும் அளவுக்கு ரசிகர்களுக்கு மெச்சூரிட்டி இல்லை” என்று விமர்சகர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, “அதெல்லாம் இல்லைங்க. எல்லாம் பாத்துட்டாங்க. புரிஞ்சிடுச்சி. ஆனா, ஒரு பயலும் காசு குடுக்கலைங்க. வீட்ல உக்காந்து திருட்டு விசிடில பாத்துட்டாங்க. இதுக்கு ஒரு வழிய கண்டுபிடிக்கணும்” என்றார் கமல்.

எல்லா நடிகர்கள், தயாரிப்பாளர்களையும் போல பட தோல்விக்கான பொறுப்பை இன்னொருவர் மீது வீசிவிட்டு செல்லவில்லை. அன்பே சிவம் வெளியான பத்தாவது வருடம் விஸ்வரூபம் படத்தில் வந்தார். ‘வீட்லயே உக்காந்து படம் பாக்குறதுதானே உங்க விருப்பம். இந்தாங்க DTH மூலமா வீட்லயே பாருங்க’ என்று திட்டத்தை அறிவித்தார். 

ஆனால், அரசியல் உள்ளே புகுந்து ஆட்டத்தைக் கலைத்தது. இது வந்தால் எங்கள் பிழைப்பே நாசமாகிவிடும் என்று அப்போது பேசியவர்கள் யாரையும் காணோம். மக்கள் வீட்டில் உட்கார்ந்து படம் பார்க்கின்றனர். ஒரு படம் ரிலீஸானால் 30ஆவது நாள் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மில் வந்துவிடும். 45ஆவது நாள் டிவியில் போட்டுவிடுவார்கள் என்று மக்களின் மனம் மாறிவிட்டது. 

படம் ரிலீஸாகும் நாளிலேயே இணையதளங்களில் வெளியிடப்பட்டாலும், குவாலிட்டிக்காக ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்களுக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு முன்பே வழிகாட்டிய கமல், அவரது கனவுப்படமான மருதநாயகத்தைப் படமாக்க முடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். எனவே, நினைத்த ஒரு படத்தை எடுக்கமுடியாதவர் எப்படி ஆண்டவராக முடியும் என்ற கேள்வி வருகிறதல்லவா?

கமலும், கமலும்

மதுரை அல்லது திருச்சி விமான நிலைய வாயிலாக இருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தை சீக்கிரமாகவே ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபாரத்தில் வெளியிட்டுவிட்டதால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து நிருபர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அதற்கு “அவன் வேற நாட்டுக்காரன். அவனுக்கு உங்க பிரச்சினை புரியாது. புரிஞ்சிக்கவும் விரும்பமாட்டான்” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு கடந்து சென்றார் கமல். 

நான்தான் அந்த ஐடியாவை முதலில் சொன்னேன் என்றோ, அன்றே என்னை விட்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா என்றோ ஆதங்கப்படாமல்... ‘அன்று நான் செய்ததுடன் என் வேலை முடிந்துவிட்டது. இங்கிருந்தே வேறு யாராவது கையிலெடுத்திருக்க வேண்டும்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு நகரும் அந்த செயல், மனிதர்களைப் படைத்ததாகச் சொல்லப்படும் ஆண்டவன், உன்னை நான்தான் படைத்தேன் எனச் சொல்லி ரைட்ஸ் கேட்காமல் இருப்பதைப் போல இருக்கிறதே!

அன்பே சிவம் படத்தின் எத்தனையோ காட்சிகளில் ‘கடவுள் யார்?’ என்ற கேள்வி தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறை கமலின் முறை வரும்போதும், பக்கத்தில் இருக்கும் யாரையாவது கையைக் காட்டிக்கொண்டே இருப்பார் கமல். என்னாடுடைய மன்னர்களைக்கூட கடவுள் என்று குறிப்பிடாமல்; தான் பார்க்காத யாரையும் கடவுள் எனக் குறிப்பிடாமல், இறந்துபோன யாரையும் கடவுள் எனக் குறிப்பிடாமல்; இவர் தான் கடவுள் என உயிருடன் உள்ள யாரோ ஒருவரைக் காட்டி, ‘கடவுள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். நீ கடவுளாக இருக்கவேண்டுமா? அன்பு செலுத்து’ என்று கமல் சொன்ன வழியிலேயே சொல்வதென்றால்...

கலை எந்த வடிவிலும், யாருக்குள்ளும் இருக்கலாம். தற்போதைக்கு உயிரோட்டத்துடன் அந்த கலையை ஒருவரிடம் காட்டி இதுதான் கலை என்று சொல்ல வேண்டுமென்றால், அங்கே காட்ட வேண்டியவர் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கமலாகத்தான் இருப்பார். கமல் கலைத் துறையின் ஓனராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தற்போது அதை ஆண்டுகொண்டிருப்பவர் கமல் தான். எனவே, கலை உலகின் ஆண்டவரே என்று அவரை அழைப்பதற்குக் கோபப்படத் தேவையில்லை. ரசித்துவிட்டுக் கண்டிக்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .