2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘நீதானே என் பொன்வசந்தம்’

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 29 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


‘நீதானே என் பொன்வசந்தம்’ - மனசைப் பாதிக்கிற இன்னொரு படம். அழகி, ஆட்டோகிராப், சில்லுனு ஒரு காதல், விண்ணைத் தாண்டி வருவாயா... இப்படி ஒரு சில படங்கள் பார்த்த பிறகு மனசு இலேசாகி, நினைவுகளுக்கு சிறகு முளைத்து முன்னும் பின்னுமாக பறந்து கொண்டிருக்குமே... அப்படி ஓர் உணர்வு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. நாட்கள் கடந்தும் அந்த உணர்வு நெஞ்சை விட்டு இறங்க மறுப்பது ஓர் இனிப்பு விஷம்! ஒருவேளை, ஒன்றிரண்டு குத்துப்பாட்டு, வடிவேலுவின் அடி வாங்குகிற காமெடி, இரட்டை அர்த்த வசனங்கள் என்பவற்றை மட்டும்  எதிர்பார்த்துப்போவோரை இந்த படம் திருப்திப்படுத்தாமல் இருக்கக்கூடும்.

வருண் கிருஷ்ணனாக ஜீவாவும், நித்யா வாசுதேவனாக சமந்தாவும் வாழ்ந்திருக்கிற படம் இது. எட்டு வயதில் ஒரே apartmentஇல் ஒன்றாகவே விளையாடும் சின்ன வயது ஈர்ப்பில் தொடங்குகிறது இவர்கள் உறவு. வீடுகள் இடம்மாற இந்த உறவில் விழுகிற இடைவெளி இவர்களின் முதற் பிரிவு. பிறகு, பள்ளி நாட்களில், கண்கள் பார்த்து வரும் காதல் சில சில்லறை காரணங்களால் இன்னொரு தடவை பிரிகிறது. இருபது வயதில், கல்லூரி விழாவொன்றில் சந்தித்து ‘இவ இவ்வளவு அழகுன்னு அப்ப தோணல மச்சான்” என்று உருகி, ‘அப்போ நடந்த விஷயத்த இப்போ பேச பேச வேணாம். we are adults now’ என்கிற ஒப்பந்தத்துடன் அதே காதல், அதே இதயங்களில் மூன்றாவது தடவையாகவும் பூக்கிறது. தன் அண்ணன் காதலால் குடும்பத்துக்கு ஏற்பட்ட தலைகுனிவை எண்ணி படிப்பில் கவனம் செலுத்த தொடங்கும் வருண் பாத்திரம் ஒரு சராசரி middle class மகனாக மனதில் நிற்கிறது. வருணுக்குள் வரும் இந்த பக்குவப்படல், எல்லாவற்றையும் விட்டு அவனோடே இருக்கணும், அவன் மட்டும்தான் வேணும் என்று தவிக்கிற நித்யாவின் காதலை விட்டும் மறுபடி தூரமாக்கிற்று. “நான்தான் எல்லாமேன்னு இருந்தா, you will hate me one day” என்று நியாயப்படுத்துவதாகட்டும், “யாராவது ஒருத்தர் விட்டுக் குடுக்கணும் வருண், அதத்தான் நான் செஞ்சேன்” என்று உருகுவதாகட்டும்... இந்தக் காதலின் நான்காவது பிரிவைக்கூட யதார்த்தமாகவே எடுத்துக் கொள்கிற உணர்வை வசனங்கள் தருகின்றன.

நமக்காகவே என்றிருக்கிற உறவொன்றின் இழப்பின் இறுதிக்கட்டத் தவிப்பை இதயத்தின் ஒவ்வொரு நாடி நரம்புக்குள்ளும் இறங்குமாப்போல் பதிவு செய்திருக்கிறார் கௌதம். மிக மெதுவாகவே நகர்கின்ற காட்சிகள் சலிப்புத்தட்டுமாப்போல் இருப்பினும், கடைசி இருபது நிமிடத்தில் இருக்கிற காட்சிகளின் இயல்பும், சமந்தாவின் கண்களில் இருக்கிற ‘காதல் கைவிட்டுப் போகிறதே’ என்கிற தவிப்பும் முழு இரண்டரை மணி நேரத்தையும் தூக்கிச்சாப்பிட்டு விடுகிறது! பெரும்பாலும் எல்லார் வாழ்க்கையும் இந்த இரண்டரை மணி நேரம் சொல்கிற கதையை கடந்துதான் வந்திருக்க வேண்டும். என்ன? நிஜ வாழ்க்கையில் make up, close up shots, இளையராஜா music என்பன மட்டும் இருந்திராது!

காதல் என்பதை காத்திருப்பின் தவிப்பு, காணாமையின் வலி, பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருக்கணும் என்கிற ஏக்கம் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்துவதாயிருந்தால் – அந்த கல்லூரிப் பருவத்து காதல் சொல்லப்பட்ட விதம் கவிதையின் அழகு. ஏதோ காரணத்தால் பிரிவு ஏற்பட்ட பிறகு – அந்தப் பிரிவின் ஏக்கம் தவிப்பாக மாறி, உயிருக்குள் இறங்கி, உயிர் பிரிகிற வலி கொடுத்து வாட்டவில்லையோ அப்போது அந்த பிரிவுக்கு முன்னரான உறவில் காதல் இருந்திருக்குமா என்பது சந்தேகமே! வருண் – நித்யா உறவின் பிரிவில் வலியிருந்தது; உடம்பின் ஒவ்வொரு செல்களிலும் உயிர் உருவி கண் வழியாக உயிர் எடுக்குமாப்போல் ஒரு வலி அந்த நான்கு கண்களிலும் தெரிந்தது. அந்த வலிதான் அந்த இறுதி ராத்திரியில் நித்யாவை வருணிடமும், வருணை நித்யாவிடமும் இழுத்துப் போயிருந்தது. காதல் ஊறிப்போய் இருக்கிற உறவில், ஊடல் கூடி உடல் பிரிந்து போயினும் நெஞ்சுக்குள் இறக்கிற வலி இருக்கும் வரை எந்தப் பிரிவும் நிரந்தரமாயிராது. பிரிந்த மனசுகளுக்குள் வருகிற இந்த வலி - ஒரு புதிய உறவுக்கு உருக்கொடுக்கிற பிரசவ வலி. Ego கடந்து, இந்த வலி பொறுத்து வாழ்ந்து, புதிய வாழ்க்கை பிரசவிக்கும் அழகோடு முடிகிறது படம்.

ரேஷ்மா கட்டாலா வின் கதைக்கு அவரோடு சேர்ந்து திரைக்கதை, வசனம் எழுதி உயிர்ப்பித்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். “வாழ்க்கைல மொத தடவையா ஒரு red signal ல, traffic jam ல wait பண்ண எனக்கு புடிச்சிருக்கு” போன்ற காதல் வசனங்கள் அழகு. “I hate you நித்யா, நீ என்ன புரிஞ்சுக்கவே இல்ல... நான்... என் காதல்... அது ஒனக்கில்ல... you don’t deserve my love...” என்று யதார்த்தம் பேசும் வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம். காமெடிக்கு சந்தானம். குரலை உயர்த்தி, காண்போர் எல்லோரையும் சகட்டு மேனிக்கு நையாண்டி பண்ணும் சந்தானத்தை பார்க்க முடியாதது மகிழ்ச்சி. “சுடிதார் சாயம் போனாதான் pant, shirt லாம் கண்ணுக்கு தெரியுதில்ல, love சோறு போடாதுடா... ஆனா நட்பு... see... mutton புரியாணி..” என்று ஏகத்துக்கு கலாய்க்கிறார் மனிதர். ஆண்டனி எடிட்டிங். M.S. பிரபு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. திரைக்கதையிலும், எடிட்டிங்கிலும் இன்னும் கொஞ்சம் வேகம் கூடியிருக்கலாம். இளையராஜா இசையில் நா.முத்துக்குமார் வரிகள். எல்லா பாடல்களும் தேவாமிர்தம் ரகம்! கார்த்திக்கின் “என்னோடு வா வா என்று..” பாடல் இன்னொரு தாலாட்ட வருவாளா! சுனிதி சௌகானின் “முதல் முறை பார்த்த ஞாபகம்..” பாடல் பல காட்சிகளில் வசனமில்லாமலே கதை சொல்ல உதவியிருக்கிறது. இளையராஜாவின் “வானம் மெல்ல...” மீண்டும் எண்பதுகளுக்கு கூட்டிப் போகிறது. படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜாவின் பின்னணி இசை. இசை பேச வேண்டிய இடத்தில் இசையையும், கண்கள் மட்டும் பேசிக்கொள்ள வேண்டிய இடத்தில் மௌனத்தையும் கதை பேச வைத்து இசைக்காவியம் இழைத்திருக்கிறார் இசைராஜா. பின்னணி இசையை அனுபவித்து பார்க்க வேண்டிய மற்றொரு படம் இது.

இதுவரை வாழ்ந்த நாட்களில், நாம் பார்த்த, பழகி, வாழ்ந்த உறவுகளில் எத்தனை பேரை சின்ன சின்ன காரணங்களுக்காக எத்தனை தடவை இழந்திருப்போமோ தெரியாது. அவற்றில் எத்தனை உறவுகள் எம் வாழ்க்கையை தலைகீழாய் புரட்டிப்போட்டிருக்கும் என்பதுவும் தெரியாது. இனிமேலாவது - இருக்கிற உறவுகளை இறவாமல் பார்த்துக்கொண்டாலே போதுமானது. நமக்கே என்றான ஒன்றின் அருமை அது கைவிட்டுப்போகும் போதுதான் மனசுக்கு உறைக்கும் என்றிருந்தால், சில வேளைகளில் சில இழப்புகளின் பெறுமானம் ஈடு செய்ய முடியாது போய் விடும்! படம் பார்த்து முடிந்ததும் இப்படிப்பட்ட எண்ணம் மனசில் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

மொத்தப் படத்தையும் இரண்டு வரிகளுக்குள் கௌதம் இப்படிச்சொல்லி விடுகிறார். “Sometimes a second chance is the best gift that u can give to someone you love; and if you love someone, sometimes a second chance is the best gift you can give yourself.”

வாழ்க்கைப் பக்கங்களை புரட்டிப்பார்த்தால் – சில வேளைகளில் அது பிழையில்லை என்றே தோன்றுகிறது! நமக்கு நாமே பரிசு கொடுத்துக்கொள்ள கசக்குமா என்ன??!

-றிகாஸ்  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .