2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

அகதியாக ஏற்கும் நாட்டுக்கு அனுப்ப கோரி மலேசியாவில் தமிழர்கள் உண்ணாவிரதம்

Super User   / 2010 மே 25 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 67பேர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த உண்ணாவிரதத்தை கைவிடும்படி முகாம் அதிகாரிகள் வலியுறுத்தியும் அவர்களின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்வதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேசிய கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் பெண்கள், குழந்தைகள் உட்பட இலங்கைத் தமிழர்கள் 75பேர் அந்நாட்டு கடற்படை அதிகாரிகளினால் பினாங்கு கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில் தங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும்படி மலேசிய அரசாங்கத்தை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த கோரிக்கையினை முதலில் எற்றுக்கொண்ட மலேசிய அரசாங்கம், பிறகு ஏற்க மறுத்ததால் கப்பலை விட்டு இறங்காமல் தொடர்ந்து இரண்டு நாட்களாக பழுதடைந்த கப்பலிலேயே இருந்தனர். அதனையும் மீறி தங்களை இறக்க முயற்சி செய்தால் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அறிவித்தனர்.

இதனையடுத்து, பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சமாதானம் செய்து கரைக்கு அழைத்துச் சென்றார்.

அதன்பின்னர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனி முகாம்களில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தும் முகாம்களை விட்டு வெளியே அனுப்பவில்லை என்று முகாமில் உள்ள 67ஆண்கள் கூறினர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்படி ஆண்கள் மாத்திரம் இன்று முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .