2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இடைக்கால பட்ஜெட்?

Kanagaraj   / 2016 மே 24 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்காலப் பட்ஜெட் (வரவு-செலவுத் திட்டம் அல்லது பாதீடு)ஒன்றுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தேவையானதா, இல்லையா என்பது குறித்துத் தீர்மானிக்குமாறு, அரச நிதிச் செயற்குழு, பாதீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளரைக் கேட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அரச நிதிச் செயற்குழு, இது தொடர்பாக ஆராய்ந்துள்ளது. இக்கூட்டத்துக்கு, பாதீட்டுப் பணிப்பாளரும் அழைக்கப்பட்டிருந்தார்.

ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டிலிருந்து அரசாங்கம் ஏராளமாக விலகியுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்காக ஏலவே சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டின் வருமான முன்மொழிவுகள் பயனற்றுப் போயுள்ளதால், இடைக்காலப் பாதீடு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, முன்னதாகக் கோரியிருந்தார்.

வரி மாற்றங்களை அரசாங்கம் கொண்டுவந்துள்ளமையே, தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கான முக்கியமான காரணமாக அமைந்தது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அரச நிதிச் செயற்குழுவின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், ஆரம்பப் பாதீட்டிலிருந்து அரசாங்கம் எவ்வளவு விலகியுள்ளது என்பதைத் தீர்மானித்து, அறிக்கையொன்றைத் தனது செயற்குழுவுக்குச் சமர்ப்பிப்பதற்கு, மேலும் இரண்டு வாரகால அவகாசமொன்றைப் பாதீட்டுப் பணிப்பாளர் கோரியுள்ளதாகத் தெரிவித்தார். அதன் பின்னரே, இடைக்காலப் பாதீடு தேவையானதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் ஒன்றுகூடிய குறித்த செயற்குழு, நாடாளுமன்றத்துக்கான பாதீட்டு அலுவலகமொன்றை உருவாக்கி, வருடாந்தப் பாதீடுகள் தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறுவதற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுப்பதற்குத் தீர்மானித்ததாகத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, அந்த அலுவலகம் உருவாக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல்களைத் தொடர்ச்சியாகப் பெறக்கூடியதாக இருக்குமெனத் தெரிவித்தார். குறித்த அலுவலகத்தை உருவாக்குவது தொடர்பாகவும் அதற்கான ஊழியர்களை உள்வாங்குவது தொடர்பாகவும், சபாநாயகருடன் இணைந்து, அரச நிதிச் செயற்குழு செயற்படுமெனவும் சுமந்திரன் எம்.பி மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .