2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் 'ஆயுதங்களை 4 இயக்கங்கள் கைவிட்டன'

Gavitha   / 2016 ஜூலை 12 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய- இலங்கை ஒப்பந்தம், 13ஆவது  திருத்தத்தை மாத்திரம் கொண்டு வரவில்லை. அது, ஆயுதம் தூக்கிப் போராடிய ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், டெலோ, ஈ.பி.டி.பி ஆகிய இயக்கங்களின் ஆயுதங்களையும் கீழே வைக்க வழிசமைத்தது என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

'இந்த ஒப்பந்தத்தை நம்பியே இந்த இயக்கங்கள், தேர்தல் முறைமை, ஜனநாயக வழிக்குத் திரும்பின என்ற உண்மைகளை, 13ஆம் திருத்தம் எங்கள் நாட்டின் மீது இந்தியாவால் திணிக்கப்பட்டது எனக்கூறும் சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தமிழ்ச்; சங்கத்தில் நடைபெற்ற, மூத்த தமிழ் தொழிற்சங்கவாதி ஐ.தி.சம்பந்தன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

'1956இன் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தினால் உருவான மொழிப்பிரச்சினையை அடிப்படையாக கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. இன்று, அந்த மொழிவிவகார அமைச்சராக நான் இருக்கின்றேன். ஆட்சி மொழி தொடர்பில் சட்டம் இருக்கிறது. ஆனால் அது, நேற்றுவரையில் நடைமுறை ஆகவில்லை.

இப்போது நான் இந்தப் பொறுப்பை ஏற்றதுடன், திட்டமிட்டுப் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளேன். ஒவ்வோர் அமைச்சுக்கும் ஆட்சிமொழிச் சட்டத்தை அமுல் செய்ய, விசேட நிதி ஒதுக்கீட்டை வலியுறுத்தும் அமைச்சரவை பத்திரமொன்று என்னால் கடந்த வாரம், அமைச்சரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மொழிப்பிரச்சினைத் தீர்வு, தமிழ் அரச ஊழியர்களுக்கு மட்டும் காட்டப்பட்ட பாரபட்சம் நீக்கம் என்பவை, இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முன்னோடியாக இருந்து வழிகாட்டும். ஆனால், மொழி உரிமை உறுதிப்படுத்தப்பட்டால், அனைத்தும் சரியாகிவிடும் என்று அர்த்தம் இல்லை. தேசிய இனப்பிரச்சினை தீர, அதிகாரப்பகிர்வு அவசியம் என்பதை நான் மிகத்தெளிவாக அறிந்துள்ளேன். இன்று அதிகாரப்பகிர்வு பற்றி பேசும்போது சில சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள், 13ஆம் திருத்தத்தைகூட இன்னமும் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை என்று தெரிகிறது' என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .