2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

இலங்கையில் ஊழல்கள், சித்திரவ​தைகள் தொடர்கின்றன

Kogilavani   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பல்வேறு வகையான சித்திரவதை, ஊழல் நடவடிக்கைகள், இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பான விசாரணைகள், துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று, ஐக்கிய நாடுகள், இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது.   

ஜெனிவாவில் நேற்று முன்தினம் புதன்கிழமை (07) வெளியிடப்பட்ட, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் இறுதி அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் 10 பேர் கொண்ட நிபுணர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் பின்னர், இலங்கையில் பாரிய சித்திரவதைகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.   

நாளாந்தம் நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதாகவும் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.   

கொலை அச்சுறுத்தல்கள், கொலைகள், தடுத்து வைத்தல், கடத்திச் செல்லுதல், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் இடம்பெறும் மரணங்கள், தாக்குதல்கள் போன்ற விடயங்கள் இலங்கையில் அதிகளவில் இடம்பெறுவதாக, இந்தக் கண்காணிப்பின் போது தெரியவந்துள்ளது.   

அத்துடன், இலங்கையில் இவ்வாறான நிலைமைகளில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நியாயத்தை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், குறித்த கண்காணிப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.   
எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய, மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--