Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 15 , பி.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
மரண தண்டனைக்கு மேலதிகமாக 60 ஆண்டுகள் கடூழிய சிறை
சேயாவின் 5 1/2 வயது நிறைவு நாளன்று தீர்ப்பளிப்பு
மதுவே குற்றத்துக்கு காரணம் என்கிறார் குற்றவாளி
பிள்ளை வளர்ப்பில் அக்கறை வேண்டும் என்கிறார் தந்தை
பெற்றோரின் கவனயீனமே குற்றத்துக்கு வழிசமைக்கிறது: நீதிபதி
கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 4 வயதும் ஏழு மாதங்களேயான சேயா சந்தவமி பக்மீதெனிய என்ற சிறுமியை, அலாக்காகத் தூக்கிச்சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இலந்தாரி ஜெடிகே சமன் ஜயலத் என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட மேல் நீதிமன்றம், அவருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (16), மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
மேல் மாகாணத்தைச் சார்ந்த நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன, அவருக்கு மரணதண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
கம்பஹா, கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படல்கம பகுதியில் செம்டெம்பர் 11 ஆம் திகதிக்கும் செப்டெம்பர் 13 ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், முழு நாட்டையுமே உலுக்கியது மட்டுமன்றி, குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை விதிக்கவேண்டும் என்ற குரலும் ஓங்கியிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே, சட்டமா அதிபரினால், சந்தேகநபருக்கு எதிராக நேரடியாகவே மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு, அதிகுற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.
சிறு வயதான சேயா சந்தவமி பக்மீதெனிய என்பவரை மரணமடையச் செய்தமை அல்லது மரணத்தை எதிர்நோக்கும் அபாயத்துக்கு உள்ளாக்கியமை, அதனூடாக அவருடைய சட்டரீதியான பாதுகாவலரான சமந்தி ரேணுகா என்பவரின் பாதுகாப்பை இல்லாமல் செய்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை, அந்தச் செயற்பாடுகளின் ஊடாக சிறுவயதேயான அச்சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை, அந்தச் செயற்பாட்டிலிருந்து பாலியல் திருப்தியைப் பெற்றுக்கொள்வதற்கு வன்கொடுமை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமியைப் படுகொலை செய்தமை மனிதப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவருக்கு எதிராக டிசெம்பர் மாதம் 23ஆம் திகதியன்று, அதிகுற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு, 2016 மார்ச் மாதம் 3ஆம் திகதியன்று வழங்கப்படவிருந்த நிலையில், தீர்ப்பு 15ஆம் திகதியன்று (நேற்று) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சேயா சந்தவமி, 2010 செப்டெம்பர் 16ஆம் திகதியன்று பிறந்தார். அவருக்கு இன்றுடன் ஐந்தரை வயது பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வீட்டிலுள்ள கட்டிலில் 2015 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இரவு உறங்கிக்கொண்டிருந்த போது சேயா சந்தவமி, கடத்தப்பட்டார்.
இந்நிலையில், வீட்டுக்கு அண்மையிலுள்ள வாய்க்காலிலிருந்து இரண்டு நாட்களின் பின்னர், அதாவது 13ஆம் திகதியன்று, அவரது சடலம் நிர்வாணமான நிலையில் மீட்கப்பட்டது.
படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரான சமத் ஜயலத்தின் மரபணு அறிக்கை (டி.என்.ஏ), படுகொலை செய்யப்பட்ட சிறுமியான சேயா சந்தவமியின் சடலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் மாதிரிகளுடன் பொருந்தியிருந்தது.
இதனையடுத்தே, அவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 29ஆம் திகதியன்று நிறைவடைந்தது. சாட்சி அட்டவணையில் 30 பேர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதில் அறுவர் மட்டுமே சாட்சியளித்திருந்தனர்.
பிரதிவாதியின் கோரிக்கைக்கு அமைவாகவே, ஜூரி சபை இன்றி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் கடந்த 26ஆம் திகதியன்று மன்றில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, முறைப்பாட்டாளரின் சட்டத்தொகுப்புரையை ஆறு மணிநேரத்துக்கு மேலாக நிகழ்த்தினார்.
வழக்கின் பிரதிவாதி, குற்றத்தைச் செய்த முறைமை, சுயாதீனமான சாட்சிகள், பிரதிவாதியின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றை தனது தொகுப்புரையில் முன்வைத்தார்.
குற்றம் இடம்பெற்று 72 நாட்களுக்குள் பிரதிவாதிக்கு எதிராக அதிகுற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது என்பதுடன் குற்றம் இடம்பெற்று 166 நாட்களுக்குள் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்தன. குற்றம் இடம்பெற்று 184 நாட்களில், (அதாவது சேயா சந்தவமிக்கு 5 வயதும் 6 மாதங்களும் நிறைவடையும் நாளான) நேற்று (15) தீர்ப்பளிக்கப்பட்டது. இது இலங்கை சட்ட வரலாற்றில், மிகவும் குறைந்த நாளிலேயே தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காகும்.
வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படவிருந்த நிலையில், பிரதிவாதியான இலந்தாரி ஜெடிகே சமன் ஜயலத், கடும் பாதுகாப்புடன் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்றத்தின் பாதுகாப்பைப் பொலிஸார் அதிகரித்திருந்தனர்.
வழக்கில் சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியான பிரதிவாதி இனங்காணப்பட்டுள்ளார் என்று அறிவித்த, மேல் மாகாணத்தைச் சார்ந்த நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் ஏதாவது கூற விரும்புகின்றீரா என பிரதிவாதியைப் பார்த்துக் கேட்டார்.
பிரதிவாதியின் கூண்டுக்குள் தலையைக் கவிழ்த்தவாறு நின்றிருந்த சமத் ஜயலத் 'இவ்வாறான குற்றங்கள், மது மற்றும் புகைப்பொருள் பாவனையினாலே இடம்பெறுகின்றன. வேறொன்றும் கூறுவதற்கு இல்லை' என்றார்.
இந்நிலையில், முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்து சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, 'சின்னஞ்சிறு சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, படுகொலை செய்தமை, முழு நாட்டையும் உலுக்கியது. அவ்வாறான குற்றத்துக்காக அதியுச்சபட்ச தண்டனையை வழங்கவேண்டும் எனக் கோரிநின்றார்.
பிரதிவாதியின் சார்பில், அரச செலவில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சத்துரங்க அமரதுங்க, பிரதிவாதி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டமையால், அச்சம்பவங்களின் தன்மைக்கேற்ப தண்டனையைக் குறைக்குமாறு கோரிநின்றார்.
தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் கருத்துரைத்த நீதிபதி, 'பெற்றோர், வீட்டில் சுதந்திரமாக இருக்கின்றோம் என்பதற்காக, பிள்ளைகளின் பாதுகாப்பில் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. தற்போதைய பிள்ளைகளின் பாதுகாப்பு மிகப் பயங்கரமானதாகவே இருக்கின்றது. தற்போதைய பெற்றோர் இரவுவேளை வரையிலும் தொலைக்காட்சிகளை பார்க்கின்றமையால், இவ்வாறான குற்றங்களை இழைக்கின்ற வெளியாருக்கு, இலகுவில் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றது' என்றார்.
அதன்பின்னர், நீதிமன்றத்தில் அந்த அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மின்விசிறிகள் நிறுத்தப்பட்டன. அறை இருண்டது. அனைவரும் எழுந்துநின்று மௌனம் காத்தனர். அதன்பின்னர் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.
'இந்த வழக்கின் பிரதிவாதியை, இந்த நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டுள்ளது. ஆகையால், முதலாவது குற்றத்துக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபாவும், இரண்டாவது குற்றத்துக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும 25 ஆயிரம் ரூபாய் தண்டமும். மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்படுகின்றது. இந்த தண்டத்தை செலுத்தவிடின் மேலதிகமாக ஒருவரும் சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும்.
நான்காவது குற்றமான சிறுமிக்கு மரணதை ஏற்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு இந்த நீதிமன்றம் மரணத்தண்டனை விதிக்கின்றது. ஜனாதிபதி நியமிக்கின்ற நாளன்று, நேரத்தில் மற்றும் இடத்தில் குற்றவாளியின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டி அவரது உயிர், அவரது உடலிலிருந்து பிரியும் வரையிலும் தூக்கிலிடப்படவேண்டும்' என்று தீர்ப்பளித்து, தீர்ப்பில் ஒப்பமிட்டார்.
ஒப்பமிட்ட அந்தப் பேனையை உடைத்து வீசிவிட்டு நீதிபதி, மன்றிலிருந்து பிற்பகல் 12 மணியளவில் வெளியேறிவிட்டார். அதனையடுத்தே மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான சமத் ஜயலத், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இதேவேளை, மன்றுக்கு வெளியே வந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சேயா சந்தவமியின் தந்தை, 'என்னுடைய மகளின் புகைப்படங்களைப் பிரசுரிப்பதையோ, வெளியிடுவதையோ ஊடகங்கள் இனியாவது நிறுத்திக்கொள்ளவேண்டும்.பிள்ளைகளின் விடயத்தில், பெற்றோர் கூடுதல் அக்கறை காட்டவேண்டும் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. இந்தத் தீர்ப்பு திருப்தியளிக்கின்றது' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago