2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு; நாளை ஆரம்பம்; விழாக்கோலம் பூண்டது கோவை

Super User   / 2010 ஜூன் 22 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ்நாடு, கோவை, பீளமேட்டிலுள்ள, "கொடிசியா' வளாகத்தில் நாளை 23ஆம் திகதி புதன்கிழமை கோலாகமலாம ஆரம்பிக்கப்படவுள்ளது.

வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த மாநாட்டில், இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல், தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து சென்று கலந்துகொண்டுள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600பேரும், பல இலட்சக்கணக்கான மக்களும் பங்கேற்கின்றனர்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிறது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார். மாநாட்டுச் சிறப்பு மலரை ஆளூனர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடவுள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி "செம்மொழி தமிழ் விருது" வழங்கவுள்ளார்.

பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளனர். அத்துடன், முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றவுள்ளார். பின்னர் ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதீபா பட்டேல் பேசவுள்ளார்.

இந்நிலையில், நாளை மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது" என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

நாளை ஆரம்பித்து எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன.

மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாட்டுக்கான ஆரம்ப விழா நாளை காலை நடைபெறவுள்ளது.

நாளை மாலை நடைபெறவுள்ள "இனியவை நாற்பது' நிகழ்வினை அடுத்து, நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் போன்ரன நடைபெறவுள்ளன. அத்துடன் 25ஆம் திகதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ரனவும் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து, 26ஆம் திகதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றன நடைபெறவுள்ளதுடன் மாநாடு நிறைவு நாளான 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்களான சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .