2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஊழியர்களைக் குறைப்பதற்காக தன்னார்வ ஓய்வுபெறல் திட்டம் அறிமுகம்

Kogilavani   / 2016 ஜூலை 12 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்துன் ஏ ஜயசேகர

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, தன்னார்வ ஓய்வுபெறல் திட்டமொன்றை, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அறிமுகப்படுத்தவுள்ளார்.

'கடந்த 1964ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம், பணப்பற்றாக்குறை காரணமாக செயலிழந்துள்ளது. அதனால், நிறுவனத்துக்குப் புத்துயிரளிப்பதற்காகவே, இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தமையும் மீன் விநியோகஸ்தர்களுக்கான கட்டணங்களைச் செலுத்த முடியாமல் போனதாலுமே குறித்த நிறுவனத்துக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டது' என்று அமைச்சர் கூறினார்.  

'எந்தவொரு உற்பத்தியிலும் ஈடுபடாத சுமார் 350க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவை வழங்கப்படுகின்றன. மீன் விநியோகஸ்தர்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படாமலுள்ளதால், மீன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

745 ஊழியர்களைக் கொண்டு மாத்திரமே, இந்த நிறுவனம் நடத்தப்படல் வேண்டும். ஆனால், தற்போது 1,113 ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். மீன் விநியோகஸ்தர்களுக்கு 689 மில்லியன் ரூபாய் கொடுக்கப்படவேண்டியுள்ளது.

ஆனால், சம்பளம் மற்றும் கருமூலச் சொத்துக்கள் அனைத்துமாக 650 மில்லியன் ரூபாய்கள் மாத்திரமே எம்மிடம் உள்ளன. இது போன்ற சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வைத்துக்கொண்டு நிறுவனத்தை இயங்கவைக்க முடியாது. எனவேதான் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது' என்று அமைச்சர் விளக்கமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .