2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'எமக்கு பயமில்லை'

Princiya Dixci   / 2016 ஜூலை 28 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

'நிர்ணயிக்கப்படும் திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகங்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது. நாம் எதற்காகவும் யாருக்காகவும் பயப்படவில்லை. கடந்த தேர்தல்களில் தைரியமாக முகங்கொடுத்து, வெற்றியீட்டிய எமக்கு, இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வெற்றி இலகுவாகவே அமையும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

'ஐக்கிய தேசியக் கட்சி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாரான நிலையிலேயே உள்ளது. நாம் தோல்வியடைந்துவிடுவோம் என்ற அச்சத்தினாலேயே தேர்தல் பிற்போடப்படுவதாக சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். கடந்த தேர்தல்களில் அமோக வெற்றியீட்டிய எமக்கு, இந்தத் தேர்தல் வெற்றியும் இலகுவாகவே அமையும். அதனால் எமக்கு யாரைக்கண்டும் எதற்காகவும் பயமில்லை' என்றார்.

மேலும், 'நிலக்கரி கொள்வனவின்போது அதிகளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

 2005ஆம் ஆண்டு தொடக்கம் நிலக்கரி கொள்வனவுக்கான விலைமனுக்கோரலை நோபல் ரிசோர்ஸஸ் நிறுவனம் நிர்வகித்து வந்தது. ஆனால் அதற்கான அனுமதியோ அமைச்சரவை அங்கிகாரமோ வழங்கப்படாத நிலையில், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, அவருடைய அனுமதியின் பேரிலேயே அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைச்சரவை அங்கிகாரத்துடன் அந்த விலைமனுக்கோரல் சுவிஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் நோபல் ரிசோர்ஸஸ் நிறுவனத்தை இதற்குள் இணைப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் போடும் தாளத்துக்கு ஏற்பவே, ஊழலுக்கு எதிரான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க ஆடுகின்றார்.

இந்த நோபல் ரிசோர்ஸஸ் நிறுவனத்தின் பின்னணியில் முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களின் பிள்ளைகள் இருப்பது தெரியவந்துள்ளது' எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X