2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

'காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கேயென தெரியாது’

Editorial   / 2017 மே 31 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், அரசாங்கத்திடம் மட்டும் கேள்வி கேட்பது நியாயமற்றது. அரசாங்கத்துக்கும், அவர்கள் எங்கே என்பது பற்றித் தெரியாது” என்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களது உறவுகள் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. இதே நிலைப்பாட்டில் தான், அரசாங்கமும் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை மட்டுமே அரசாங்கத்தினால் வழங்க இயலும்” என்றார்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பரணகம ஆணைக்குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியன, இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தன.

அவர்களுடைய விசாரணைகளின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள், தங்கள் பிள்ளைகளை படையினர் கடத்தியதாகவும் புலிகள் கடத்தியதாகவும், வேறு ஆயுத குழுக்கள் கடத்தியதாகவும், இந்திய அமைதிப்படை கடத்தியதாகவும் கூறியுள்ளார்கள்.

இருப்பினும், புலிகளின் தலைவர்களோ அல்லது வேறு அமைப்புகளின் தலைவர்களோ, இன்று உயிருடன் இல்லை. இந்நிலையில், எல்லோரும் அரசாங்கத்திடம் மாத்திரம் கேள்வி கேட்கிறார்கள். அது நியாயமற்றது. இந்த அரசாங்கம், கடந்தகால அரசாங்கங்களைப் போல் இளைஞர்களை மறைத்து வைத்துக்கொண்டு பொய்களைச் சொல்லித்திரியவில்லை.

“இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்கவே, அரசாங்கம் நினைக்கிறது. இதன் ஒரு கட்டமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் ஒன்று வழங்கப்படவுள்ளது. அதன் ஊடாக, அவர்களுடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவுள்ளது. இதற்காக, ஜனாதிபதியினால் குழுவொன்றை உருவாக்கவும் அந்தக் குழு ஊடாக, பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறியவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

“இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், தென்னிலங்கையிலும் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் என்ன செய்வது? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என, அவர்களுடைய உறவினர்கள் நம்புகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. இதே நிலைப்பாட்டில் தான், அரசாங்கமும் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியவில்லை. இன்று பிரபாகரன் இல்லை, சூசை இல்லை. இந்நிலையில், எவரிடம் சென்று கேட்பது? இதே பதிலையே ஜனாதிபதியும் சொல்வார். இதைத்தான் சொல்லவும் முடியும்” என, ஆளுநர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X