2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

குதிரைகளின் உயிரிழப்பை ஆராய விசேட குழு நெடுந்தீவுக்கு விரைந்தது

Editorial   / 2017 ஜூலை 15 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசேட குழு,  வியாழக்கிழமை (13) நெடுந்தீவுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

நெடுந்தீவின் அடையாளமாகவுள்ள குதிரைகள், வரட்சி காரணமாக தினமும் உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாக ஆராய்ந்து வரட்சியில் இருந்து குதிரைகளை பாதுகாக்கும் வகையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குழுவொன்றை அண்மையில் நியமித்தார்.

முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தலைமையிலான இக்குழுவில், மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், வை.தவநாதன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன், நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர் கு.இரட்ணராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர், வியாழக்கிழமை (13) நெடுந்தீவுக்குச் சென்று, அங்கு குதிரைகள் வாழுகின்ற பிரதேசங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டதோடு, பிரதேச செயலகத்தில் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளனர்.

இக்குழுவினர், நெடுந்தீவுக் குதிரைகளை அழிவில் இருந்தும் பேணிப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அடையாளங்கண்டு, தமது அறிக்கையை 2வார காலத்தினுள் முதலமைச்சரிடம் கையளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவில் வாழுகின்ற இக்குதிரைகள், இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகமாக உயிரியலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாச் சிறப்பு மிக்க நெடுந்தீவில், இக்குதிரைகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உயிரியற் சொத்தாகவும் இருப்பதால் இவற்றைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து பலராலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .