2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கானியா பெனிஸ்டருக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளரான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ்  மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு இன்று (09) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கானியா வெனிஸ்டர் பிரான்ஸிஸ், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தார்.

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்,  கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

விசாரணைகளை அடுத்து, கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸை கடந்த 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான், கடந்த  மாதம் 17ஆம் திகதி உத்தரவிட்டார்.

குறித்த தூதரக அதிகாரியை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர், கடந்த  மாதம் 16ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டார். 

பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியதாக சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டிருந்தார்.

சுவிஸர்லாந்து தூதரக பெண் அதிகாரி, ஆறாவது நாளாக கடந்த 16ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அத்துடன், அன்று காலை 9 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய அவர், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் அங்கொடை தேசிய மனநல மருத்துவ சேவை பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையிலே பொய்ச் சாட்சியமளித்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கியது தொடர்பில் அவரை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் கடந்த 08ஆம் திகதி முதன்முறையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் பல தடவைகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவரை  மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .