2021 மார்ச் 04, வியாழக்கிழமை

‘கேப்பாப்புலவுக் காணிகளை மாத இறுதிக்குள் விடுவிக்கவும்’

Editorial   / 2017 ஜூலை 25 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவுக் காணிகள் யாவும் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கண்ணியமாகக் கோரியுள்ளார்.

கேப்பாப்புலவுக் காணிகள் தொடர்பில், ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். 2017 ஜூலை, 20 ஆம் திகதியிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் பிரதிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, முன்னாள் இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரியும், இலங்கை ஆயுதப் படைகளின் தற்போதைய தலைமை அதிகாரியுமான ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  

இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு உரித்தான முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக் காணி என்று தலைப்பிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“தற்பொழுது இராணுவம் நிலைகொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவுக் காணி, தமிழ்க் குடிமக்களுக்குச் சொந்தமானது. அது நான்கு காணித் துண்டுகளை உள்ளடக்கியது. (01) 243 ஏக்கர்கள் (02) 189 ஏக்கர்கள் (3) 111 ஏக்கர்கள் (4) 70 ஏக்கர்களும் 02 றூட்களும். எல்லாமாக மொத்தம் 613 ஏக்கர்களும் 02 றூட்களும் ஆகும்.  

கடந்த மே மாதம் 18 ஆம் திகதியன்று நானும், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் குறித்த காணிக்கு விஜயம் செய்து, அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான இராணுவக் கட்டளை அதிகாரியுடன் கலந்துரையாடினோம். அப்போது அவர் எமக்குத் தெரிவித்தவை  

1) 243 ஏக்கர்கள் அடங்கிய 1ஆவது காணித்துண்டு உடனடியாகவே விடுவிக்கப்பட முடியும், என்றும்  

2) 189 ஏக்கர்கள் அடங்கிய 2ஆவது காணித்துண்டு ஒரு மாத காலத்துள் விடுவிக்கப்பட முடியும், என்றும்  

3) 111 ஏக்கர்கள் அடங்கிய 3ஆவது காணித்துண்டு 6 மாத காலமளவில் விடுவிக்கப்பட முடியும், என்றும்  

4) 70 ஏக்கர்கள் 02 றூட்கள் அடங்கிய 4ஆவது காணித்துண்டை விடுவிப்பதில் தாம் சில கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.  

கடந்த 141 நாட்களாக கேப்பாப்புலவில் படையினர் தங்கியிருக்கும் காணி நுழைவாயிலுக்கு முன்பாக அமர்ந்திருந்து, தமது வாழ்விடங்களில் தாங்கள் மீண்டும் குடியமர்ந்து வாழ்வாதார நடவடிக்கைகளை ஆம்பிப்பதற்காகத் தமது காணிகளை விடுவிக்கும்படி கோரி தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருவதை தாங்களும் அறிவீர்கள்.  இந்த மாத இறுதிக்குள் கேப்பாப்புலவுக் காணிகள் யாவும் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கண்ணியமாகக் கோருகின்றேன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .