2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சர் மீதான தடை நீக்கம்

Gavitha   / 2016 மே 30 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

முப்படையினருடைய முகாம்களுக்கு செல்வதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இராணுவ முகாங்களுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் ஜயந்த ஜயவீர தெரிவித்தார்.

திருகோணமலை, சம்பூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணினிப் பிரிவையும் திறந்துவைக்கும் நிகழ்வில், கடற்படையின் உயரதிகாரியொருவரைத் திட்டித்தீர்த்த சம்பவத்தை தொடர்ந்து, முப்படை முகாம்களுக்குச் செல்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் முதலமைச்சரால் பங்குபற்றப்படும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் முப்படையினர் சமுகமளிக்க மாட்டர் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. எனினும், கடந்த 27ஆம் திகதியன்று, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு முதலமைச்சரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில், இவ்வாறு தான் செல்லும் நிகழ்வுக்கு முப்படையினர் சமுகமளிக்காமை தொடர்பாக தனது கண்டனத்தை அவர் வெளியிட்டிருந்தார்.

அப்படியாயின், ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு தான் சமுகமளிக்கும் போது, அதற்கும் முப்படையினர் சமுகமளிக்க மாட்டார்கள் என்பது தொடர்பாக அவர் வினவியிருந்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு, கடல், விமான, இராணுவப் படைகளின் முகாம்களுக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று, இலங்கைக் கடற்படை கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமையன்று அறிவித்திருந்தது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட், கடற்படையின் உயரதிகாரியொருவரைத் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை திட்டித்தீர்த்த சம்பவம் தொடர்பிலான காணொளி, இணையத்தளங்களில் வெளியாகி, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .