2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

'சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இலங்கைக்கு ஆரோக்கியமல்ல'

Yuganthini   / 2017 ஜூன் 07 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ஏ.எம்.ஏ.பரீத்,  எம்.எஸ்.எம்.நூர்தீன்

'பாரிய யுத்தமொன்றுக்கு முகங்கொடுத்த பின்னர், படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கைப் போன்ற நாடுகளில், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது, ஆரோக்கியமானதல்ல' என்று, இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பிளிப் க்ஸேகோர் ஸெவ்கி (Fillip Grzegorzewski) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கும்இடையிலான சந்திப்பொன்று, செவ்வாய்க்கிழமை (06) மாலை, கொழும்பிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நாட்டின் சமகால நிலைமை,  இலங்கை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அவலங்கள் குறித்து, அப்பிரதிநிதிகளிடம், முதலமைச்சர் எடுத்துரைத்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த முதலமைச்சர் கூறியதாவது,

'போருக்குப் பின்னர், சிறுபான்மையினருக்கு எதிராக வெளிப்படையாகவே முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறைகள், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றன.

சிறுபான்மையினர், அவர்களது மதஸ்தலங்கள் மற்றும் உடமைகள் மீதான வன்முறைச் சம்பவங்கள் குறித்து, நாம் கரிசனையுடன் உள்ளோம். சிறுபான்மையினர்  மீதான அச்சுறுத்தல்கள் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையிலான அரசியல் தீர்வொன்று விரைவில் முன்வைக்கப்பட வேண்டிய அவசியம், இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.

'நாட்டில், இயல்புநிலை தொடர்ந்த போதிலும், இதுவரை பொதுமக்களின் குடியிருப்புக் காணிகள் மற்றும் விவசாயக் காணிகள் விடுவிக்கப்படாதுள்ளமை கவலையளிக்கிறது. காணிகளை விடுவிப்பது தொடர்பில், கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கம், கரிசனை காட்டிவருகின்ற போதிலும், அதற்கான நடவடிக்கைகள் மக்களிடையே பெருமளவு திருப்தியை ஏற்படுத்தக்கூடியதாய் அமையவில்லை.

'அது மாத்திரமன்றி, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்ற போர்வையில், சிறுபான்மையினரின் காணிகள் அபகரிக்கப்படுவதும் தொடர்கிறது. யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில், கடந்த அரசாங்கமோ இந்த அரசாங்கமோ இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கவில்லை. எனவே, இன்றும் அவர்களது உறவினர்கள், வடக்கு, கிழக்கில் தமக்கான தீர்வுகோரி போராடி வருகின்றனர்.

'யுத்தம் முடிந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும், அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாண மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

கிழக்கில், யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், வாழ்வாதார உதவிகளின்றி, பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே, அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த, ஐரோப்பிய நாடுகள் முன்வரவேண்டும். அத்துடன், கிழக்கு மாகாணத்தில், வேலையில்லாப் பிரச்சினையும் பாரியதொரு பிரச்சினையாக உள்ளது. புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கும் தொழிற்றுறைகளை உருவாக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .