2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'சுமையை மக்கள் மீது திணிக்க கூடாது'

George   / 2016 மார்ச் 12 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நாட்டின் பொருளாதாரம் தற்போது நெருக்கடி நிலையில் இருப்பதால், அதன் சுமையை மக்கள் மீது திணிக்க கூடாது. மின்சாரம், தண்ணீர் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்படமாட்டாதென பிரதமர் அறிவித்திருக்கின்றமை வரவேற்கத்தக்கது' என ராம் நற்பணி மன்றத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான சி.வை.பி.ராம் தெரிவித்துள்ளார்

அண்மையில், வற்வரி அதிகரிக்கப்பட்டமை உட்பட நாட்டில் அரசாங்கத்தின் மீது வீண்பழி சுமத்தும் வகையிலான மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடையில் பரப்பட்டு வருகின்றமை தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. மக்களை சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து விடுவித்து உண்மையான ஜனநாயக சூழலுக்குள் பிரவேசிக்க வைத்துள்ளது. 

இவ்வாறான நிலையில், உலகப் பொருளதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அண்மித்து வரும் காலப்பகுதிகளில் இவ்வாறு உலகப்பொருளதாரத்தில் தளம்பல் நிலைமைகள் ஏற்படுவதென்பது கடந்தகால அனுபவங்கள். 

அதனை முறையாக அணுகுவதற்கான பொறிமுறைகளை வகுத்தி பாரிய நெருக்கடிகளிலிருந்து தம்மை பாதுகாத்து வருகின்றமையே செயற்திறன் வாய்ந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளுக்காக இருக்கின்றது.

எனினும், கடந்த ஆட்சியாளர்கள் கண்ணைமூடிக்கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாங்கிய கடன் தொகைகளால் தற்போது எமது நாடும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டு விட்டது. 

கடந்தகால ஆட்சியாளர்களால் பெறப்பட்ட கடன்களின் பிரகாரம் இதுவரையில் 9.5ரில்லியன் ரூபாய் செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். 

ஆட்சிப்பொறுப்பேற்று ஆறு மாதங்களில் எந்தவொரு புதிய அரசாங்கத்தாலும் இவ்வாறான பாரிய தொகையொன்றை முறையாக கையாள்வதென்பது பாரிய சவாலுக்குரிய விடயமாகும். எனினும் ஆணை வழங்கிய மக்கள் மீது அந்த சுமையை திணிப்பதற்கு அரசாங்கம் முயலக்கூடாது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோருகின்றேன்.
எவ்வாறாயினும், அண்மையில் வற்வரியை 15சதவீதமாக அதிரித்துள்ளபோதிலும் மின்சாரம், தண்ணீர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியை அவர் அதிகரிக்கவில்லை. இது வரவேற்கப்படவேண்யதொரு விடயமாகும். 

அவ்வாறான நிலையில், அரசாங்கத்திடம் பொருத்தமான பொருளாதார கொள்கைகள் இல்லை, மக்களை நெருக்கடியில் தள்ளிவிடுகின்றது, சுமைகளை ஏற்றுகின்றது என முறையற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தவறான பிரசாரங்களை சில வேண்டத்தகாத சக்திகள் முன்னெடுத்து வருகின்றமையானது ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் அது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அது மட்டுமன்றி அவ்வாறன போலிப் பிரசாரத்துக்குள் அகப்பட்டுவிடவும் வேண்டாம்.

புதிய அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தி இலங்கையர் என்ற அடையாளத்துடன் சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதையே இலக்காக கொண்டிருக்கின்றது. இதற்கு இனவாத சக்திகள் தடையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணையோடு துணையாக நிற்குமாறு கோரிக்கை விடுகின்றேன்' என இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .