2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ஜீவ சமாதி அடைய கோரிக்கை

Editorial   / 2017 ஜூலை 23 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனைக் கைதியாக வாழ்ந்து வரும் முருகன், தான் ஜீவ சமாதி அடைய அனுமதி கோரி, சிறைதுறைக்கு மனு கொடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே வழக்கில் தண்டனை பெற்ற முருகனின் மனைவி நளினி, பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் 4 பேரும், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் நளினியும் முருகனும், கணவன்-மனைவி என்பதால். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, பொலிஸ் பாதுகாப்புடன் சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நளினி- முருகன் தம்பதிகளின் மகளின் திருமணம் நடைபெறவுள்ளமையால், தன்னை, சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று, நளினி ஏற்கெனவே சிறைத்துறைக்கு மனு அளித்துள்ளார். எனினும், அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம், முருகனின் சிறைச்சாலை அறையிலிருந்து, அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளி ராபர்ட் பயஸ் என்பவர், தன்னைக் கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று, வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், முருகனும், ஒரு கோரிக்கையை முன்வைத்து, சிறைத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “நான் எனது வாழ் நாளில், அதிக காலம் சிறையிலேயே கழித்து விட்டேன். சிறை வாழ்க்கையைத் தொடர எனக்கு விருப்பம் இல்லை. அதனால், ஜீவ சமாதி அடைய அனுமதி தாருங்கள். ஜீவ சமாதி அடைய இருப்பதால், எதிர்வரும் மாதம் 18ஆம் திகதியிலிருந்து, உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள மாட்டேன்” என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

முருகன் அளித்த மனு, வேலூர் சிறைச்சாலை அதிகாரிகள் மூலம், சென்னை சிறைத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .