2021 மார்ச் 01, திங்கட்கிழமை

‘டெங்குவின் அட்டகாசத்தை தேர்தலால் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும்’

Editorial   / 2017 ஜூலை 17 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“குப்பை மற்றும் டெங்குவுக்கு எதிராகப் போராடக் கூ​டிய அடிமட்ட அரசியல் தலைவர் ஒருவர் தற்போது தேவை. அதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டியது அவசியமாகும்” என, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.  

கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி பலர் பேரணியை முன்னெடுக்கின்றனர். இன்னும் சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய முறைப்படி தேர்தலை நடத்த மு​டியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் கூறியுள்ளனர். மேலும், நீதியை மாற்றியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், 55 சதவீதம் நீதியை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.   

“இவ்வகையான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளனர். இதுபோன்ற சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே, இத்தேர்தலை பிற்போட்டுள்ளார்களே தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் அல்ல. அவர்களுக்குத் தேர்தலைப் பிற்போடுவதற்கு எந்தத் தேவையும் இல்லை. இருப்பினும், மக்களைத் திருப்திப்படுத்தும் வகையிலாவது பழைய முறைப்படி தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.  

​“டெங்குக்கு எதிராகப் போராடவும் குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் அவசியம் ஏற்பட்டுள்ளது, இவை இரண்டுக்கும் தீர்வு காண அடிமட்ட அரசியல் தலைவர் ஒருவர் எமக்குத் தேவை. எனவே, அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இவ்விவகாரத்தில் கயிறு இழுக்காமல், குழப்பங்களை விளைவிக்காமல் இந்த வருட முடிவுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி, உள்ளூராட்சிப் பிரதிநிதிகளை நியமிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.  

மேலும், “நகர சபைக்கு முழுமையான அரசியல் அதிகாரம் வழங்கப்படாததன் காரணமாகவே, டெங்கு மற்றும் கழிவுப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாமல் இருக்கின்றது.  

“பெரும்பாலானோர் அரசியல்வாதிகளை ஏசுகின்றனர். அரச அதிகாரிகள் காலை 8 மணி முதல் 4 மணி வரையே வேலை செய்கின்றனர். ஆனால், அரசியல்வாதிகள் 24 மணிநேரமும் வேலை செய்கின்றனர். அரசியல்வாதிகளுக்கும் நகர்புற உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இடையே பாரிய இடைவௌி காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .