2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

துள்ளிக் குதித்தார் அமைச்சர் ஜோன்

Kogilavani   / 2017 ஜூன் 09 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, நேற்றைய தினம் ஊடகவியலாளரிடம் நடந்துகொண்ட முறை, கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.   

ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தியதுடன், கமெராவையும் தாக்குவதற்கு அமைச்சர் முயற்சித்தார். அமைச்சர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பிலான, ஒளிப்பதிவு, சமுக வலைதளங்களில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.   

வத்தளை- கெரவலபிட்டிய பிரதேசத்துக்கு குப்பைகளை கொண்டு சென்று கொட்டுவது தொடர்பில், அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தலைமையில், கந்தானையிலுள்ள கட்சியின் காரியாலயத்தின் கலந்துரையாடலொன்று நேற்று(08) நடைபெற்றது.  

கலந்துரையாடலையடுத்து, அலுவலகத்திலிருந்து வெளியில் வந்த அமைச்சர் அமரதுங்கவிடம், ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினர்.  

“இதற்கு முன்னரும் வத்தளை பிரதேசத்தில் குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்போது, நீங்கள் (அமைச்சர்) வந்து பார்க்கவில்லை என்றும், அது தொடர்பில் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை எனவும், பிரதேச மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்” என, ஊடகவியலாளர் வினவினார்.  

கேள்வியால், கோபமடைந்த அமைச்சர் ஜோரன் அமரதுங்க, தகாத வார்த்தைகளால் ஊடகவியலாளரை ஏசியதுடன், அவரை நோக்கி கையை நீட்டிக்கொண்டு தாக்குவதற்கு முனைந்தார்.  “அத்துடன், இனிமேல் இந்த (கேட்) எல்லைக்குள் வரக்கூடாது, எல்லோரும் இங்கிருந்து உடனே வெளியேறுங்கள்” என, சத்தமிட்டார்.  

இதன்போது, ஊடகவியலாளர்கள் “பொதுமக்களே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்” என்று, சொல்ல, அமைச்சர் ​மேலும் கோபமானதுடன், அவரது ஆதரவாளர்கள் “ வாயை மூடிக்கொண்டு செல்லுங்கள்” என, ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.  

அமைச்சருடன் இருந்தவர்களும், நாங்கள் அவர்களை (ஊடகவியலாளர்களை) வெளியில் அனுப்பிவிட்டோம், நீங்கள் உள்ளே போங்கள் என, அமைச்சரை தள்ளிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டனர்.   

கம்பஹா மக்களுக்கு தான், பாரியளவில் சேவை செய்துவிட்டதாகவும், எந்தவொரு தேர்தல்களிலும் தோல்வியடையவில்லை என்றும் அண்மையில் தெரிவித்திருந்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, இளம் அரசியல்வாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கிவிட்டு, அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக, அண்மையில் அறிவித்திருந்தார்.

அவ்வாறான, அறிவிப்பொன்றை விடுத்துவிட்டு, ஊடகவியலாளரின் கேள்விக்கு, இவ்வாறு கோபம் கொள்வது, மூத்த அரசியல்வாதிக்கு உகந்தது அல்ல என்று சமுக வலைதளங்களில் கருத்துகள் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X