2026 ஜனவரி 21, புதன்கிழமை

’குறைகளை நிவர்த்தி செய்தால் ஒத்துழைப்பு’

Freelancer   / 2026 ஜனவரி 21 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது அமுல்படுத்தியுள்ள  கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து, புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தினால் .அதற்கு   முழுமையான ஒத்துழைப்பு வழங்க நாம் தயார்  என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   செவ்வாய்க்கிழமை (20)  இடம்பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில்,

சமூக கட்டமைப்பில் ஏழ்மையை இல்லாதொழிப்பதற்காகவே 2023ஆம் ஆண்டு அஸ்வெசும நலன்புரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை இந்தாண்டுடன் நிறைவுப்படுத்த  2023ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. எனினும்,  தற்போதைய சமூக பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை 2027ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு   முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளர்கள் தெரிவு தொடர்பில் மாறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதியற்ற 58 சதவீதமானோருக்கு கொடுப்பனவு வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தவறு திருத்தப்பட வேண்டியது அவசியம்.

பயனாளர் தெரிவு தொடர்பில் தற்போது  புதிய அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கைக்கு அமைய புதிய பயனாளர்கள்  தெரிவு செய்யப்பட வேண்டும். அரசாங்க நிதி பற்றிய குழு ஊடாக இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை, புதிய கல்விக் கொள்கையை நாம் எதிர்க்க வில்லை. நடைமுறைக்குச் சாத்தியமான வகையில் புதிய கல்விக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும். தற்போது அமுல்படுத்தியுள்ள  கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு  புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும். அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X