2020 நவம்பர் 25, புதன்கிழமை

'தோட்டக்காட்டான் என்ற பட்டமே மிஞ்சியது'

Thipaan   / 2016 மார்ச் 09 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எமது இந்திய வம்சாவளிச் சமூகமானது, தமது உழைப்பினை மட்டுமே நம்பி கடல்கடந்து  இலங்கைக்கு வந்த சமூகமாகும். எங்களிடம் இருந்தது உடல் உழைப்பு என்ற மூலதனம் மட்டுமே. எமது மக்களின் உழப்பினைச் சுரண்டிக்கொண்டவர்கள் எமக்குக் கொடுத்தது, நாடற்றவர்கள், கள்ளத்தோணி, தோட்டக்காட்டான் என்ற பட்டமே. அதைக் கண்டு நாங்கள் வருத்தப்படவில்லை. காரணம், இன்று பசுமையாக தெரிகின்ற பெருந்தோட்டங்கள் அனைத்தும் அன்று காடுகளாக கிடந்தவைகள் தான்' என்று இலங்கை தொழிலாளர்

காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

அரசியமைப்புச் சபை தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையின் போது உரையாடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'இலங்கையின் அரசியல் திட்ட வரைவுகளில், இந்தி வம்சாவளித் தமிழர்களின் அபிலாஷைகள், தேவைகள், உரிமைகள் தொடர்பில் ஓர் அசமந்தப் போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. டொனமூர் யாப்பில், இலங்கையில் இருந்த 21வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

சோல்பரியில், சிறுபான்மையினர் காப்பீடுகள் தொடர்பில், சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், துரதிர்ஷ்ட வசமாக 1948இல் எங்கள் சமூகத்தின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. இதனால், எமது சமூகம் இலங்கையின் தேசிய அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டது.

1948 முதல் 1978 வரையான காலப்பகுதி வரையிலும், நாங்கள் அரசியல் உரிமையினை அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். இதன் விளைவாக பொருளாதாரம், கல்வி, சமூக விடயங்கள் என்று அனைத்து விடயங்களிலும் எமது சமூகமானது பின்தள்ளப்பட்டது. இந்த நிலை இன்றும் தொடர்கிறது.

எமது இந்திய வம்சாவழி சமூகமானது தமது உழைப்பினை மட்டுமே நம்பி, கடல் கடந்து  இலங்கைக்கு வந்த சமூகமாகும். எங்களிடம் இருந்தது உடல் உழைப்பை என்ற மூலதனம் மட்டுமே எமது மக்களின் உழப்பினை சுரண்டிக்கொண்டவர்கள் எமக்கு கொடுத்தது, நாடற்றவர்கள், கள்ளத்தோணி, தோட்டக்காட்டான் என்ற பட்டமே. அதைக் கண்டு நாங்கள் வருத்தப்படவில்லை. காரணம் இன்று பசுமையாக தெரிகின்ற பெருந்தோட்டங்கள் அனைத்தும் அன்று காடுகளாக கிடந்தவைகள்.

அவற்றை தமது இரத்தத்தைச் சிந்தி வளப்படுத்தி தோட்டங்களாக்கி, அன்று ஆங்கிலேயருக்கும் இன்று உள்நாட்டு முதலாளிக்கும் வருமானம் பெற்றுத்தருகின்றவர்கள் எமது சமூகத்தினர். இதனால் எந்த சொல்லையும் கண்டு நாங்கள் அஞ்சிவிடப்போவதில்லை. உழைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். எங்கள் உழைப்பில் உயர்ந்த எவரும் இதுவரையில் எங்கள் சமூகத்தை கண்டுகொள்ளவில்லை.

வரலாறு எங்களுக்கு நல்ல பல பாடங்களை தந்திருக்கிறது. இதனால் இந்திய வம்சாவழி தமிழர்கள் என்ற சமூகம் சார்ந்த உரிமைகளை அரசியல் யாப்பு ரீதியாக பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் எங்களுக்கிருக்கின்றது. இலங்கையின் சமூகங்களை வகைப்படுத்துகின்றபோது இன ரீதியாக 4ஆவது இடத்தில் இருக்கின்ற நாங்கள் ஏனைய சமூகங்களை விடவும் பின்தங்கிய நிலையிலிருக்கிறோம்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .