2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வவுனியாவில் கொள்ளையர்களின் துப்பாக்கி சூட்டுக்கு குடும்பஸ்தர் பலி

Super User   / 2010 ஜூன் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் இன்று அதிகாலை வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, சம்பவத்தின் போது கை துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தரது மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
நெடுங்கேணியில் மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட  பகுதியிலுள்ள வீடொன்றிலுள் நுழைந்துள்ள கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த கணவன் மனைவி மீது வாள் வெட்டு மற்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன் நகைகள், பணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சொந்த இடத்தில் மீளக்குடியமர்ந்துள்ள இந்த வயோதிப தம்பதியினர் பாதுகாப்புக்காக வேறு ஒருவருடைய வீட்டில் நித்திரைக்குச் செல்வது வழக்கமாகும். அதன்படி, தமது கொட்டிலில் இருந்து சற்றுத் தொலைவில் இருந்த அந்த வீட்டிற்குப் பாய், தலையணை சகிதம் சென்றபோது பற்றைக் காடொன்றுக்கருகில் வைத்து அவர்களை வழிமறித்த கொள்ளையர்கள் பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தைக் கழற்ற முயற்சித்துள்ளனர்.

அவர்களது முயற்சி பயனளிக்காத நிலையில் குறித்த பெண்ணின் விரலைத் துண்டித்து மோதிரத்தை எடுத்துள்ளதுடன், அவர் அணிந்திருந்த தங்கக் காப்புகளைப் பெறுவதற்காக அவரது ஒரு கையை முழங்கைக்கு மேலாக வெட்டி துண்டித்துள்ளனர். அதே சமயம், கணவன் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதையடுத்து, இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த தம்பதியினரால் தலையணைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும்  பணமும் மேற்படி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து மேற்படி இருவரும் அயலவர்களால் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவ்விருவருக்கும் வவுனியா வைத்தியசாலியில் சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் குறித்த குடும்பஸ்தர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

நெடுங்கேணி, நாவலர் வீதியைச் சேர்ந்த  64 வயதுடைய ராசலிங்கம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். அவருடைய மனைவியான விக்னேஸ்வரி (52 வயது) என்பவரே காயமடைந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0

  • koneswaransaro Thursday, 10 June 2010 06:05 PM

    கொள்ளையர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லும் அதிகாரம் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்டாலும் தவறு இல்லை போல் தெரிகிறது. சாதாரண சிவில் சட்டம் இத்தகைய மிருகங்களுக்குப் பொருந்தவே பொருந்தாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--