2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

'நான் நவீன அரசியல்வாதி': மனோ

George   / 2016 ஜூலை 13 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அரசியல்வாதிகள் திட்டங்களை தீட்டலாம். சட்டங்களை ஆக்கலாம். ஆனால், அவை நடைமுறையாவது அமைச்சரவை அமைச்சு செயலாளர்களின், மாவட்ட செயலாளர்களின், பிரதேச செயலாளர்களின்  மூலமாகத்தான் என்பதை நான், இந்த மிக குறுகிய காலத்துக்குள் நன்கு அறிந்துக்கொண்டுள்ளேன். 

ஆகவேதான், இந்த நாட்டின் அனைத்து இனங்களின், மதங்களின், மொழிகளின் மத்தியிலான தேசிய சகவாழ்வுக்கான சாவி உங்கள் கரங்களில்தான் இருக்கின்றது என்று இன்று நான் கூறுகிறேன்.  அதேபோல் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதின் ஆரம்பம், அரச கரும மொழிகள் கொள்கை அமுல் செய்வதிலும், குறிப்பாக தமிழ் மொழிக்கு வரலாற்றுரீதியாக மறுக்கப்பட்டுள்ள உரிமை அளிக்கப்படுவதில்தான் தங்கியுள்ளது' என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடத்தப்பட்ட அரச கரும மொழிக்கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

'தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை பல்வேறு கோணங்களில் இன்று தமிழ் மக்கள் தேடுகிறார்கள். வடக்கு கிழக்கு இணைப்பு, 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சமஷ்டி, மலையகத்தில் புதிய பிரதேச சபைகள் என்று கோருகிறார்கள். அதேபோல் சர்வதேச விசாரணயை கோருகிறார்கள். இவற்றை மறுபக்கத்தில் உள்ளோர் கடுமையாக எதிர்க்கின்றார்கள். இவற்றில் எது நடைமுறையாக போகின்றது என்பதை காலந்தான் காட்டும். ஆனால், இவற்றை நோக்கி செல்லும் முன் இங்கு இன்னொரு முக்கிய விடயம் இருக்கிறது. அதை தமிழ் மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் எப்போதும் எதிர்த்துக்கொண்டே இருப்பவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அதுதான் மொழியுரிமை.

எமது நாட்டில் இன்று மொழி சட்டம் இருக்கிறது. இதில் நான்  எந்தவித விட்டுக்கொடுப்புக்கும் இடம் கொடுக்கப் போவதில்லை. நாடு முழுக்க பொதுவாக சிங்களம், தமிழ் இரண்டும் ஆட்சி மொழிகள். ஆங்கிலம் இணைப்பு மொழி. 

வடக்கு, கிழக்கில் தமிழிலும், ஏனைய மாகாணங்களில் சிங்களத்திலும் அரச ஆவண பதிவுகள் இருக்கும். இரு மொழி பிரதேச செயலக பிரிவுகளில், இரண்டு மொழிகளும் பயன்படுத்தப்பட வேண்டும். அரச நிறுவனங்களில் உள்ளக, வெளியக அறிவிப்பு பெயர் பலகைகள் மூன்று மொழிகளிலும் இடம் பெற வேண்டும். 

எழுதும் போது, வடக்கு, கிழக்கில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற வரிசையிலும், ஏனைய மாகாணங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ற வரிசையிலும் எழுதப்பட வேண்டும். மூன்று மொழிகளிலும் ஒரே அளவில் எழுத வேண்டும். பெயர் பலகைகளில் தமிழில் குறுக்கி சிறிதாக எழுதுவதை நிறுத்துங்கள். பிழையாக எழுதுவதை நிறுத்துங்கள்.  

நான் ஓர் நவீன அரசியல்வாதி. எனது திறன்பேசிக்கு, வைபர், வட்ஸ்-அப், மின்னஞ்சல், பேஸ்புக் மூலமாக இன்று பெருந்தொகையில் தமிழ் இல்லாத, தமிழ் பிழையாக எழுதப்படும் புகார்கள் வருகின்றன. இவற்றை நான் எனது அமைச்சு அதிகாரிகளிடம் விசாரிக்கும்படி பணிக்கின்றேன்.  இனி என்ன பிரச்சினை என்றால், எனது அமைச்சின் அதிகாரிகள் சென்று விசாரிக்கும் போது, நிறைய அமைச்சுகளில் இவற்றை சீர் செய்ய பணியாளர் இல்லை, நிதி ஒதுக்கீடு இல்லை, என்ற பதில்கள் வருகின்றன. இதை கருத்தில் கொண்டு  நான் கடந்த வாரம் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. 

இதன் மூலம், அடுத்த வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டில், ஒவ்வொரு அமைச்சுகளுக்கும், மொழி சட்டத்தை அமுல் செய்ய என்று மட்டும் விசேட நிதி ஒதுக்கீடு ஒன்று வழங்கப்படும். ஆகவே எதிர்காலத்தில் நீங்கள் பணம் இல்லை என்ற பதிலை எனக்கு தர முடியாது. எல்லா பெயர் பலகைகள், எல்லா அமைச்சு படிவங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியும் இருந்தே ஆகவேண்டும். 

அதுவரையில் இதற்கான நிதி தேவையானால், அதை இப்போது எனது அமைச்சு உங்களுக்கு வழங்கும். இன்னும் சகவாழ்வு, மொழியுரிமை தொடர்பில் பற்பல அமைச்சரவை பத்திரங்களை எதிர்வரும் நாட்களில் நான் சமர்பிக்க உள்ளேன். இவை கடந்த காலங்களில் ஒருபோதும் நடைபெறாதவை. எனது பொறுப்பை நான் அலட்டிக்கொள்ளாமல், அவசரப்படாமல், ஆனால் காத்திரமாக செய்து வருவதாக நம்புகிறேன். உங்கள் ஒத்துழைப்பு எனக்கு வேண்டும். இதன்மூலமாக நாட்டில் உண்மையான சகவாழ்வை ஏற்படுத்த நீங்கள் உதவுகின்றீர்கள்' என அமைச்சர் மேலம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .