2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி

Super User   / 2010 மே 10 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள், தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இத்தகவலை முதல்வர் கருணாநிதி இன்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பர்வதி அம்மாள் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும்போது அரசியல் கட்சியினரோ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ அவரைச் சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் தங்கியுள்ல பார்வதி அம்மாள் தனது சிகிச்சைகளுக்காக அண்மையில் சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, பார்வதி அம்மாள் கோரிக்கை விடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும், அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெற, மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு, இந்தியத் தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு பார்வதி அம்மாள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

இதை மத்திய அரசுக்கு அனுப்பிய கருணாநிதி, பார்வதி அம்மாள் தமிழகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தரலாம் என்றும் பரி்ந்துரைத்தார்.

இதையடுத்து மத்திய அரசு பார்வதி அம்மாள் மீதான தடையை நீக்கி, அவர் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளது. இதற்காக அவருக்கு 6மாத கால விசா வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--