2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

“எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு”: கொந்தளித்த ராஜ்கிரண்

Editorial   / 2025 ஜூலை 06 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், அவர் மீது புகார் அளித்ததாகக் கூறப்படும் பெண் நிகிதாவை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என நடிகர் ராஜ்கிரண் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண்ணை விசாரித்ததாக இதுவரை எந்தச் செய்தியும் வரவில்லையே என்றும் அவர் வினவியுள்ளார்.

அஜித்குமார் லாக்-அப் மரணத்திற்குத் தமிழ்த் திரையுலகில் இருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், நடிகர் சாந்தனு கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது அவரைத் தொடர்ந்து ராஜ்கிரணும் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் இதுவரை வாய் திறக்கவில்லை என விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில், சாந்தனு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "அஜித்குமாரின் லாக்கப் மரணத்தில் இன்னொரு மனித உயிரை இழந்துள்ளோம். தாமதமாகப் பேசுவதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனினும் மௌனம் ஒரு சரியான வழி அல்ல. இன்னும் ஓர் அத்தியாயம், இன்னும் ஒரு வாழ்க்கை. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. #JusticeForAjithkumar" என்று பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்த லாக்-அப் மரணம் குறித்து நடிகர் ராஜ்கிரணும் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "தம்பி அஜித்குமாரை, ஐந்து ஆறு காவல்துறையினர் சேர்ந்து, அடித்தே கொன்ற 'கொடுங்கொலை'யை நினைத்து நினைத்து நெஞ்சம் பதறுகிறது, இரத்தம் கொதிக்கிறது. இதுபற்றி சமூக வலைத்தளங்களில் எவ்வளவோ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இவற்றிற்கெல்லாம் மூல காரணமான, தம்பி அஜித்குமார் மீது புகார் அளித்ததாகக் கூறப்படும் 'நிகிதா' என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து விசாரித்ததாக இதுவரை எந்தச் செய்தியும் வந்ததாகத் தெரியவில்லை. என்ன நடக்கிறது? ஏழை எளியவர் என்றால் உடனே பாயும் சட்டம், அதிகார வர்க்கத்திற்கு வேண்டியவர்கள் என்றால் பம்முமா? மக்கள் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு" என ராஜ்கிரண் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .