2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

பொறிமுறைகள் அமுல்படுத்தப்படும்வரை கூட்டமைப்பு காத்திருக்கும்

Kogilavani   / 2016 ஜூலை 14 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டிருத்தல் தொடர்பாக, அரசாங்கத்தின் பல்வேறு தரப்புகளிலும் பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுவரும் நிலையிலும் கூட, பல்வேறான பொறிமுறைகள் அமுல்படுத்தப்படும்வரை காத்திருந்தே, அது தொடர்பான கருத்துகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்துமென நிஷா தேசாய் பிஸ்வாலுக்கு எடுத்துரைத்ததாக, கூட்டமைப்பின் எம்.பியான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நிஷா பிஸ்வாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றுக் காலை 8.30க்கு, அமெரிக்கத் தூதுவரின்  வதிவிடத்தில் வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் தொடர்பிலான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலிநொஸ்கியும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்துரைக்கும் போதே, சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாகவும் வடக்கிலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நேற்றுப் புதன்கிழமை (13) பேச்சுவார்த்தை நடத்தியது.

கடந்தாண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துதல் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் சில பிரிவுகளை அமுல்படுத்துவதில் காணப்படும் தாமதம் குறித்து, அந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, பிஸ்வால்  தலைமையிலான குழுவினர், இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத் தரப்பினரிடம் ஏற்கெனவே கேட்டுள்ளதாகப் பதிலளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு, ஜெனீவாத் தீர்மானத்தை அமுல்படுத்துவதில்
சவால்கள் எவற்றையும் அரசாங்கம் எதிர்கொள்ளுமாயின், இலங்கைக்கு உதவுவதற்கு ஐக்கிய அமெரிக்கா தயாராக இருப்பதாக பிஸ்வால் தெரிவித்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டிருத்தல் தொடர்பாக, அரசாங்கத்தின் பல்வேறு தரப்புகளிலும் பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுவரும் நிலையிலும் கூட, பல்வேறான பொறிமுறைகள் அமுல்படுத்தப்படும்வரை காத்திருந்தே, அது தொடர்பான கருத்துகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்துமென சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பொறிமுறையொன்றை உருவாக்குகின்றபோது, மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையிலான பொறிமுறையை உருவாக்குவது அவசியமெனவும் இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டதாக கூட்டமைப்பு
தெரிவித்தது. இதன்போது, யுத்தக் குற்ற விசாரணை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், 'இச்சந்திப்பின்போது, இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இடம்பெறும் பல சீர்திருத்தங்கள் சம்பந்தமாகப் பேசப்பட்டது. விசேடமாக அரசியல் அமைப்பு சட்ட விவகாரம், பொறுப்புக் கூறல் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்கள், கடந்த வருடம் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதனை நடைமுறைப்படுத்துகின்ற சம்பவங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன. மேற்கூறப்பட்ட விடயங்களில் இலங்கை அரசாங்கம்,
இலங்கையிலுள்ள கட்சிகள் என்பன முழுமையாக வெற்றியடைவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு, விசேடமாக அமெரிக்காவின் பங்களிப்பும் உதவியும் தொடர்ந்தும் இருக்கும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் டொம் மலிநொஸ்கி ஆகியோர் உறுதியளித்துள்ளனர்' என்றார்.

மேலும், 'பொறுபபுக்கூறல் சமப்நத்மாக சரவ்தேசத்தின்  பங்களிப்பு  தொடர்பாக  இலங்கை அரசாங்கம் வித்தியாசமான பல கருத்துக்கழள முன்வைத்து  வருவதை அமெரிக்கா அவதானித்து வருவதாக நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.  எனவே, பொறுப்புக்கூறல் சம்பந்தமாக  பொறிமுறையொன்று  உருவாக்கப்படுகின்ற நேரத்தில்  அது மக்களுக்கு  நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற வகையிலான பொறிமுறையாக உருவாக்கப்படுவது  அவசியமாகும்” என அவரால் சுட்டிக்காட்டப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .