2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மாலை 4:30முதல் காலை 8.30 வரை விமானங்கள் பறக்கும்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 26 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க, பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலைய ஓடுபாதையின் திருத்தப் பணிகள், ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை 28 நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் விமான நிலையத்தின் ஊடான சர்வதேச விமான பயணங்கள், மாலை 4.30இல் இருந்து அடுத்த நாள் காலை 8.30 வரை இடம்பெறவுள்ளது. உள்நாட்டு விமான பயணங்கள் இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இடம்பெறும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிர்மாணப்பணிகளுக்காக செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த தொகை 7 பில்லியன் ரூபாயாகும். நெதர்லாந்து நாட்டின் உசாத்துணை நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையில் சீன நாட்டு நிறுவனங்கள் இரண்டு இந்த நிர்மாண பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தின் நிர்வாக நேரக் கட்டுப்பாடு காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் விமான நிலையத்தின் வெளிச்செல்லல் பிரிவின் வருகையாளர்கள் முழுமையாக மட்டுப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 'கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை, கடந்த 1986ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இது 3,350 மீற்றர் நீளத்தையும் 45 சதுரமீற்றர் பரப்பையும் கொண்டது. இது 20 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் அறிக்கையின் பிரகாரம், இந்த ஓடுபாதைக்கான புனரமைப்பு காலம், 1996ஆம் ஆண்டுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் குறித்த அமைப்பினால் அடிக்கொரு தடவை ஞாபகப்படுத்தப்பட்டு வந்தது. இந்தப் பிரதான ஓடுபாதை, 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படும்' என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், '28 எயார்லைன்ஸ்களைச் சேர்ந்த சுமார் 177 விமானங்கள், அன்றாடம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது. நாளாந்தம் 25,000 பணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவதுடன், 300 டொன் பொருட்கள் பரிமாறப்படுகின்றன. இதனால், ஓடுபாதையில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு விமானங்களுக்கும் இது பாதிப்பையும் ஏற்படுத்தும்' என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .