2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

1,000 ரூபாய் சம்பளம் இல்லை: 100 ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்படும்

Kanagaraj   / 2016 மார்ச் 23 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்தச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்க முடியாது என்றும் 100 ரூபாயினால் மட்டுமே அதிகரிக்க முடியும் என்றும் நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (23) அறிவிக்கப்பட்டது.

அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிக்கப்படும் 100 ரூபாயில் 60 ரூபாய், 2015.05.01ஆம் திகதியிலிருந்தும் மிகுதி 40 ரூபாய், 2016.01.01ஆம் திகதியிலிருந்தும் அதிகரிக்கப்படும் என்றும் இது நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத்திட்ட நிவாரணப்படிக் கொடுப்பனவைச் செலுத்துவது தொடர்பான சட்டமூலத்துக்கு அமையவே அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (23), வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரிடம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் அதனோடிணைந்த கூட்டொப்பந்தம் தொடர்பில் கேள்விகளைக் கேட்டிருந்தார்.
கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க பதிலளித்தார்.

அவரது பதிலின் விவரம்:

தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில், இரண்டு வருட காலப்பகுதிக்கு அமுலில் உள்ளவாறு 2013.04.01 அன்று கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2015.03.31ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படவிருந்த திகதி கழிந்து 7 மாதங்கள் கழிந்துள்ளன. எனினும், கூட்டொப்பந்தம் அமுலில் இருக்கும் கால எல்லையை, மேற்படி ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும் தரப்பினருக்குத் தீர்மானிக்க முடியும்.
இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததன் காரணமாக, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் தலையீட்டுடன் 2015.07.10, 2015.07.15, 2015.09.30, 2015.10.12, 2015.12.15 மற்றும் 2015.12.18 ஆம் திகதிகளில் தொழில் அமைச்சில் கலந்துரையாடல் நடத்தப்பட்டன.

மேற்படி கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த பெருந்தோட்டத் தொழிற்சங்க நிலையம் ஆகிய தொழிற்சங்கங்கள், நாளாந்தச் சம்பளத்தை 1,000 ரூபாய் வரை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தன.

எனினும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 770 ரூபாய் வரை அதிகரிப்பதற்கான பிரேரணையை தொழில் அமைச்சரும் சமர்ப்பித்திருந்தார்.

அதனடிப்படையில் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம், 620 ரூபாயிலிருந்து 770 ரூபாயாக உயரும். அதாவது, 150 ரூபாய் சம்பள அதிகரிப்பு எனினும், தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகள் ஆகிய இரு தரப்பினரும் இணங்காமையால், இணக்கம் எட்டப்படவில்லை.

இதேவேளை, இதன்போது குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய குறுக்குக் கேள்விக்குப் பதிலளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர நவீன் திஸாநாயக்க, 'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்துவது என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயமாகும். அவர்களுக்கு  720 ரூபாய் வழங்கப்படுவது தொடர்பில் அரசாங்கமும்  தோட்டக்கம்பனிகளும் இணங்கியுள்ளன' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .