Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு, பல்வேறு இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளுங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, தெஹிவளை, அத்திட்டய பேக்கரி சந்தியில் வைத்து லசந்த விக்கிரமதுங்க, படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை இடம்பெற்று 8 வருடங்கள் கடந்த பின்னர், இவ்வாறானதொரு ஒலிப்பதிவு அம்பலமாகியுள்ளமை பலரையும் சிந்திக்கவைத்துள்ளது.
தான், ஒரு வாரத்துக்கு முன்னரே ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்ததாக, மஹிந்த ராஜபக்ஷ கூறுவதும், இந்த ஒலிநாடாவில் பதிவாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதத்திலேயே, ஒக்ஸ்போர்ட் சென்றிருந்தார். அங்கு அவர், 2008 மே மாதம் 14ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றிலேயே, உரையொன்றை ஆற்றியிருந்தார். இந்த ஒலிநாடா உண்மையானதாயின், மஹிந்தவுக்கும் லசந்தவுக்கும் இடையிலான கலந்துரையாடல், 2008 மே மாதமளவிலேயே இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
மசகெண்ணெய் பரலொன்றின் விலை அதிகரிக்கும் என்றும், அந்த ஒலிநாடாவில் பதிவாகியுள்ளது. உண்மையில், 2008 மே, ஜூன், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில், உலக சந்தையில் மசகெண்ணெயின் விலை அதிகரித்தது.
அடுத்ததாக, வடமத்திய மாகாணத்துக்கான தேர்தலா நடைபெறவிருக்கின்றதென, லசந்த கேட்டிருப்பதும், அந்த ஒலிநாடாவில் பதிவாகியிருந்தது. உண்மையிலேயே, 2008 ஓகஸ்ட் மாதத்தில், அந்தத் தேர்தலும் நடைபெற்றது.
இவ்விருவரின் கலந்துரையாடலை, யார் பதிவு செய்தார்கள் என்பது தெரியாதுள்ள நிலையில், அதைப் பதிவு செய்தவர், அந்த ஒலிப்பதிவை செம்மைப்படுத்தியுள்ளமை தெளிவாகிறது. அதனாலே, சிலரது பெயர்கள் மற்றும் இடங்கள் தொடர்பில் குறிப்பிடப்படும் இடங்கிளில், இரைச்சல் சத்தமொன்று கேட்கிறது.
அலைபேசிகள் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களையும் இரகசியமான முறையில் செவிமடுக்கவும் பதிவு செய்துகொள்ளவும் கூடிய சாதனங்களை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திருந்ததாக, தேர்தல் காலங்களின் போது, அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று, லசந்த விக்கிரமதுங்களில் அலைபேசியையும் டெப் செய்யுமாறு, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் உத்தரவிட்டிருந்தார் என்ற கடிதமொன்று, கடந்த காலங்களின் போது, ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும், அக்கடிதம் தொடர்பான உண்மைத்தன்மை, இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
மஹிந்தவினதும் லசந்தவினதும் கலந்துரையாடலில், அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் கேட்கக்கூடியதாக உள்ளது. அந்த ஒலிப்பதிவில், நபரொருவரின் பெயரொன்று, தெளிவற்ற வகையில் குறிப்பிடப்படுவதும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுவதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர், கடிதமொன்று எழுதப்பட்ட விடயம் குறித்தும் பதிவாகியுள்ளது.
அத்துடன், ஒலிப்பதிவின் பிரகாரம், சரத் பொன்சேகா, தவராக பிரசாரமொன்றை மேற்கொண்டு வருகின்றார் என, லசந்த விக்கிரமதுங்க குறிப்பிடுவதும் அதில் தான் சிக்கிக்கொள்ளாத வகையில், பெயர் தெளிவற்ற நபரொருவர் தகவல் அனுப்பியிருந்ததாகவும் லசந்த குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும், தனக்கு தகவல் வழங்கியது, இராணுவத்தினர் அல்ல என்றும், லசந்த குறிப்பிட்டிருப்பது, அப்பதிவில் உள்ளது.
மிக் விமானக் கொள்வனவு தொடர்பிலேயே, இவர்கள் இவ்வாறு கலந்துரையாடுகின்றனர் என்று, சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த மிக் கொள்வனவு தொடர்பில், சண்டே லீடர் பத்திரிகையில், கடந்த 2007 ஓகஸ்ட் மாதத்தில் கட்டுரையொன்று வெளியாகியிருந்தது. ஒரு வருடத்துக்கு முன்னர், அது குறித்து எழுதியிருந்தேன் என்று, லசந்த கூறும் பதிவொன்றும், அந்தக் கலந்துரையாடலில் பதிவாகியுள்ளது. அதனால், அவ்விருவரதும் அந்தக் கலந்துரையாடல், மிக் தொடர்பானதாக இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
லசந்த கொல்லப்பட்டு சுமார் 7 வருடங்களின் பின்னர், இந்தக் கலந்துரையாடல் தொடர்பான ஒலிப்பதிவு வெளியாகியுள்ளமையால், பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் வழங்கவேண்டிய கடப்பாட்டில், மஹிந்த ராஜபக்ஷவும் கொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதிகாரிகளும் உள்ளனரென, நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவுத் தலைவர் ரொஹான் வெலிவிட்ட, இந்த ஒலிப்பதிவு தொடர்பான உண்மைத்தன்மை குறித்து கண்டறிவது, அவசியமானது என்றார்.
“தொழில்நுட்பம் என்பது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் அபிவிருத்தி அடைந்ததொன்றாக இருக்கின்றது. அதனால், இந்தக் கலந்துரையாடல், போலியாகத் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். இல்லாவிடின், பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற கலந்துரையாடலிலிருந்து வெட்டி எடுத்ததாகவும் இருக்கலாம். யார் இதைப் பதிவு செய்தார்கள்? யார் செம்மைப்படுத்தினார்கள்? என்ற கேள்விகளுக்கும் விடை தேட வெண்டும்” என, வெலிவிட்ட கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago