2021 ஜனவரி 23, சனிக்கிழமை

'வற்'குறித்து உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்: ராம்

Niroshini   / 2016 ஜூலை 16 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளதார நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசாங்கம் வற் வரியில் மேற்கொண்டுள்ள அதிகரிப்பால் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்புக்களும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்ற நிலையில், அது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

அது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த அரசாங்கமானது பல்வேறு கடன்களை பெற்றுக்கொண்டதன் காரணமாக நாடு பொருளதார ரீதியாக பல்வேறு பின்னடைவுகளை தற்போது சந்தித்துள்ளது. அந்த பின்னடைவுகளிலிருந்து மீள்வதற்காக மீண்டும் மீண்டும் கடன்களை பெற்றுக்கொள்ளாது கடன்சுமையை குறைத்துக்கொள்வதற்காக அரசாங்கம் தற்காலிகமாக வற்வரியை உயர்த்துவதாக அறிவித்திருந்தது.

எனினும், வற்வரி அதிகரிப்பினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தார்கள். அண்மையில் 16 பொருட்களுக்கான அதிகூடிய சில்லறை நிர்ணய விலை வரையறை செய்யப்பட்டுள்ளமையும் அத்தியாவசிய பொருட்களுக்கான வற்வரி அதிகரிக்கப்படமாட்டாது என பிரதமர் அளித்த வாக்குறுதியும் வரவேற்கப்படவேண்டியதாகவுள்ளது.

எவ்வாறாயினும் வர்த்தகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வற்வரி சுமையால் வீதியில் இறங்கி போராடுமளவுக்கு மனநிலை மாறியுள்ளது. உண்மையிலேயே இவ்வாறு வற்வரி அதிகாரிப்பதற்கு கடந்த ஆட்சியாளர்களே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக உள்ளனர்.

இருப்பினும் தற்போதைய ஆட்சியாளர்களே கடந்த கடன் சுமைகளுக்கும் பொறுப்புக்கூறவேண்டியவர்களாகவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய கட்டமைப்புக்களை மேற்கொள்ளவேண்டிய பொறுப்புடையவர்களாகவும் காணப்படுகின்றனர்.

எனவே, அரசாங்கம் நாட்டுக்கு நிலைபேறான பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரம் வற்வரியை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரும் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளவேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .