Yuganthini / 2017 ஜூலை 23 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்திலுள்ள 1,441 வேலையற்ற பட்டதாரிகளுக்கு, எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி அரச நியமனம் வழங்கப்படுமென, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, களுதாவளை பிரசேத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (22) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் கூறுகையில்,
“இதற்கான திகதியை எமது கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளதுடன், இந்த நியமனத்தை, ஜனாதிபதி மற்றும் பிரதமரே வழங்கிவைப்பர்.
“இதற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் புதன்கிழமை (26) கோரப்படவுள்ளன. மீதமுள்ள பட்டதாரிகள் 1,742 பேருக்கு, அரச தொழில் நியமனம் வழங்குவதற்கான அனுமதியைக் கோரியுள்ளோம். அதற்கான அனுமதியையும் பெற்று, கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற ஒட்டுமொத்த வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
“அரசியல் தீர்வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், நிதியொதுக்கீட்டையாவது மத்திய அரசாங்கம், கிழக்கு மாகாணத்துக்கு தரவேண்டும்.
“அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தை என்று கூறி, நிதியொதுக்கீட்டைக் கிழக்கு மாகாண சபைக்குத் தருவதில் ஏன் இழுத்தடிப்புச் செய்ய வேண்டும் என நான் கேட்கின்றேன். அரசியல் தீர்வுப் பேச்சுவார்தைக்கும் நிதியொதுக்கீட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது?
“பாரிய மாற்றங்கள், படிப்படியாக வந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதியும் பிரதமரும், கிழக்கு மாகாணத்துக்கு இவ்வாறான திட்டங்களைத் தருவதில் அக்கறையாக இருக்கின்றனர் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
“இரண்டு சுற்றுலா மையங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஆரையம்பதி, ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில், தலா 100 மில்லியன் ரூபாய் நிதியில், இந்தச் சுற்றுலா மையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
“பொருளாதாரத்தை மையப்படுத்தி, வியாபாரத்தை மேம்படுத்துகின்ற ஒரு தளமாக, எமது பிரதேச மக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற தளமாக, சுற்றுலா தகவல் மையமாக அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நிதியை வழங்குமாறு, அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது” என்று அவர் மேலும் கூறினார்.
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago