2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வெள்ள முகாமைத்துவத்துக்கென புதுச்சட்டம் வருகிறது

Editorial   / 2017 மே 31 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

1924ஆம் ஆண்டு 4ஆம் இலக்க வெள்ளப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்து, வெள்ள முகாமைத்துவச் சட்டத்தை உருவாக்க, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய பிரதேசங்களை வெளியிடுவது தொடர்பில் 1924ஆம் ஆண்டு 4ஆம் இலக்க வெள்ளப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம், நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டமானது, ஒரு முறை மாத்திரமே சிறிய அளவில் திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.  

கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல், காலநிலை மாற்றங்களை கவனத்திற்கொண்டு, நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பொருந்தும் வகையில் கங்கைகள் மற்றும் நீர்நிலைகளினால் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களையும், நகர்ப் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் மழையினால் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தத்தையோ அல்லது வேறு வகையில் நீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களினால், மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்கும், நாட்டின் சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்படக்கூடிய இழப்புகளையும் குறைப்பதற்காக, தற்போது நடைமுறையிலுள்ள 1955ஆம் ஆண்டு 22ஆம் இலக்க திருத்தச் சட்டத்தையும், 1924ஆம் ஆண்டு 4ஆம் இலக்க வெள்ளப் பாதுகாப்பு சட்டத்தையும் இல்லாதொழித்து, நீர்ப்பாசனத் திணைக்களத்தையும் ஏனைய தொடர்பான நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, வெள்ள முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குத் தேவையான சட்டமூலத்தை வரைவது தொடர்பில், அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .