2025 ஜூலை 12, சனிக்கிழமை

'ஹிந்தி' மொழியால் சபையில் சிரிப்பொலி

Kanagaraj   / 2016 மார்ச் 23 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

'சபாநாயகர் அவர்களே! உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? கேள்வி கேட்டிருக்கும் எம்.பிக்கு ஹிந்தி தெரியுமா? எனக்குத் தெரியாது', என்று கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'சரி, ஹிந்தி மொழியில் மூன்று அல்லது நான்கு வாக்கியங்கள் கூறுங்கள்' என, கேள்வி கேட்டிருந்த எம்.பியைப் பார்த்துக் கேட்டமையால் சபையில் நேற்று புதன்கிழமை (23) சிரிப்பொலி எழுந்தது.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில கேள்விகளைக் கேட்டிருந்தார்.
கேள்விகளின் பிரகாரம், தமது விஜயத்தின் போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பேச்சுவார்த்தை எதுவும் இடம்பெறவில்லையெனவும், அத்தகைய ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறுமாயின் நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்துவதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

'இந்தப் பாலம் குறித்து இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக இந்திய வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி, 2015.12.16 அன்று, இந்திய லோக் சபாவில் அறிவித்துள்ளார் என்பதை அறிவாரா?

மேற்படி பாலம் தொடர்பில் உண்மைக்கும் புறம்பான கூற்றை விடுத்திருப்பவர் இலங்கையின் பிரதமரா அல்லது இந்திய நெடுஞ்சாலைகள் அமைச்சரா? இந்தப் பாலம், இலங்கையின் உடன்பாடின்றி நிர்மாணிக்கப்படுகின்றதா? இந்தப் பாலத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு, பொருளாதாரத்துக்கு, தொழில் நிலைக்கு மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதா?' என்று கேட்டிருந்தார்.

கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அவை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல எழுந்து நிற்கையில் அவரை கை சைகையில் அமரச் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
'இந்திய லோக் சபாவில், இந்திய வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி ஆற்றிய உரையானது, ஹிந்தி மொழியிலேயே இருக்கின்றது. சபாநாயகர் அவர்களே, உங்களுக்கு ஹிந்தி மொழி தெரியுமா? கேள்விகளைக் கேட்ட எம்.பிக்குத்தான் ஹிந்தி மொழி தெரியுமா? தெரியாது. ஆகையால், அந்த ஹன்சாட் அறிக்கையை பெற்று ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் எடுக்கும்' எனக்கூறி அமர்ந்தார்.

குறுக்கிட்ட உதய பிரபாத் கம்மன்பில, '2015.12.16 அன்று, இந்திய லோக் சபாவில் ஆற்றிய உரை, ஆங்கில மொழியில் என்னிடம் இருக்கின்றது. இந்தியாவில் ஆங்கில மொழி ஊடகங்கள் இருக்கின்றன. எனினும், நம்நாட்டுப் பிரதமர் தொடர்பில் தவறாகப் பேசியமை தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?' என்று வினவினார்.

பதிலளித்துக்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் என்று

கேட்டுக்கொண்டதுடன், ஹிந்தி மொழியில் மூன்று அல்லது நான்கு வாக்கியங்களைக் கூறுமாறு கம்மன்பில எம்.பியிடம் கேட்டுவிட்டமர்ந்தார்.

மற்றுமொரு குறுக்குக் கேள்வியை எழுப்பிய உதய பிரபாத் கம்மன்பில, 'இந்திய தூதுவராலயத்தில் ஹிந்தி மொழி தெரியாத ஒருவர் கூட உங்கள் ஆட்சியில் இல்லையா?' என்று வினவினார்.

'ஆம், ஆம், பிரித்தானிய தூதுவராலயத்துக்கு சீன மொழி தெரிந்தவரையே கடந்த கால ஆட்சியாளர் நியமித்துள்ளார். இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். இவற்றைச் செய்தது வெளிவிவகார அமைச்சாகும். அதனைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளையே அமைச்சர் மங்கள சமரவீர முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்' என்று கூறிய பிரதமர், 'ஹிந்தி மொழி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகள் தெரிந்தவர்களை நியமிக்குமாறு கோருவார். அது மட்டுமன்றி, கூட்டு எதிரணியின் சார்பாக மலையாள மாந்திரிகம் தெரிந்தவரை நியமிக்குமாறும் இந்த எம்.பி கோருவார்' என்றார்.

குறுக்கிட்ட கம்மன்பில எம்.பி, 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்பது போல பிரதமரின் பதில் இருக்கிறது', அதாவது, கொய்த யன்னே மல்லே பொல் என சிங்கள பழமொழியைக் கூறினார்.

பதிலளித்த பிரதமர், சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைப்பதைத் தவிர பொது எதிரணிக்கு ஒன்றுமே தெரியாது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .