2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

600 பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு கருணா தான் மன்னிப்பு கோர வேண்டும்:சந்திரகாந்தன்

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் பலவந்தமாக கொல்லப்பட்டமைக்கு விடுதலை புலிகளின் அப்போதைய கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா அம்மானே மன்னிப்புக் கேட்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் இன்று புதன்கிழமை சாட்சியமளிக்கையிலேயே முதலமைச்சர் சந்திரகாந்தன் இவ்வாறு குறிப்பிட்டர்.

1990ஆம் அண்டு விடுதலைப் புலிகளினால் பொலிஸார் பலவந்தமாக கொல்லப்பட்டமை குறித்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக  மன்னிப்புக் கோர முடியுமா என ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் கேட்டர்.

"1990 ஆம் ஆண்டு நான் விடுதலைப் புலி உறுப்பினரல்ல. அச்சமயம் பாடசாலை மாணவனாக இருந்தேன். அத்துடன் பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன். 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியே நான் இயக்கத்தில் இணைந்தேன். அதனால் அன்று தலைவராக இருந்த கருணா அம்மானே மன்னிப்புக் கோர வேண்டும்" என சந்திரகாந்தன் பதிலாளித்தார் .

தொடர்ந்து அவர் சாட்சியமளிக்கையில்,

விடுதலைப் புலிகளை வளர்ச்சியடைவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸாவே காரணம். அன்று பிரேமதஸா ஒருபுறம்  விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்து கொண்டு மறுபுறம் விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்ட மாகாண சபை முறைமைக்கு ஆதரவாக செயற்பாட்டார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுத முறை மற்றும் பயங்கரவாத முறைகளின் ஊடாகவே வளர்ச்சியடைந்தது.

அன்று போராளிகள் ஹில்டன் ஹோட்டலில் தங்குவதற்கு இடம் வழங்கப்பட்டது. அவ்வாறு தங்கியவர்களே அமிர்தலிங்கத்தை கொன்றார்கள்.

அன்று பிரேமதாஸாவின் ஆட்சிக் காலத்தில் படையினருக்கு எதிராக புலிகள் போரை பிரகடணம் செய்தனர். அதனாலேயே இன்று இவ்வளவு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது.

அன்று படை வீரர்களால் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டு கொல்லப்படும் போது, அவர்கள் முஸ்லிம் பெயர்களை பயன்படுத்தினர். அதாவது கேப்டன் முனாஸ் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டனர். இதனால் ஊர்காவற்துறையில் பணியாற்றும் முஸ்லிம்களே இக்கொலைகளை செய்வதாக தமிழ் மக்கள் நினைத்தனர். ஆனால் கொலை மேற்கொண்டது படையினரே.

அரசியல்வாதிகள் விட்ட பிழையினை பிரபாகரனும் விட்டதனாலேயே நான் அதிலிருந்து பிரிந்தேன். அவர் ஒரு போதும் அரசியல் தந்திரத்தை உபயோகிக்கவில்லை. அத்துடன் சூழல் மாற்றத்திற்கு ஏற்ப இயக்கத்தை மாற்றமைடையச் செய்யவுமில்லை.

நாம் இயக்கத்திலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்து, கிழக்கு மாகாணத்தை கைப்பற்றினோம். அப்போது எமது சமூகத்திற்கு பாரிய இழப்பு ஏற்பட்டது.

நாங்கள் ஆயுத முறையினை கைவிட்டு கட்சி ஒன்றை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு, ஜனநாயக  முறையில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

தற்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த மாகாண சபை முறை எமது  நாட்டுக்கு மிக அவசியம். அதனை பலமுள்ளதாக  அமுல்படுத்த இவ்வாணைக்குழு சிபாரிசு செய்ய வேண்டும்.

உரிமைகள் தொடர்பாக பேசப்படுகின்ற இந்த ஆணைக்குழு ஊடக நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய வகையில் சிறந்த சிபாரிசுகள் கிடைக்க வேண்டும் என்றார்.

ஆணைக்குழு உறுப்பினர்களால் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவற்றுக்கான அவரின் பதில்களும்

ஆணைக்குழு: வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியேற்ற தமிழ் இயக்கங்கள், புத்திஜீவிகள் மற்றும் தமிழ் மக்கள் எவ்வாறான நடவடிக்கைகைகளை எடுத்துள்ளீர்கள்?

முதலமைச்சர்: வட மாகாணம் தொடர்பான விடயங்களில் நான் ஒரு போதும் தலையிடுவதில்லை. கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான பிரச்சினை சம்பூரில் மாத்திரம் தான் காணப்படுகின்றது.

ஆணைக்குழு: சம்பூரிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 6,000 குடும்பங்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்படவில்லை. இதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா?

முதலமைச்சர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது மாகாணத்திற்கு வந்த போது என்னிடம் இது தொடர்பாக தெரிவித்தார். இம்மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு அப்பகுதி மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

ஆணைக்குழு: அப்படியென்றால் சம்பூர் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் விரைவில் மீளக்குடியேற்றுவீர்கள் என்று ஆணைக்குழு முன் உத்தரவாதம் அளிப்பீர்களா?

முதலமைச்சர்: சம்பூர் என்பது திருகோணமலை துறைமுகத்திற்கு எதிரே உள்ள முனையாகும். யுத்த காலத்தில் அப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது படையினருக்கு பாரிய அச்சுறுத்தலை கொடுத்தது.

அப்பிரதேசத்தை இன்று அரசாங்கம்  பொருளாதார நகரமாக்க தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இந்திய அரசின் உதவியுடன் சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதனால் அம்மக்களை அவர்களின் சொந்த காணிகளில் மீளக்குடியேற்ற முடியாதுள்ளது. இதற்கு மாற்றீடாக அப்பகுதியில் அவர்கள் வேண்டிக் கொள்ளும் காணியில் அவர்களை மீளக்குடியேற்ற முடியும். எனினும் சம்பூர் மக்கள் சொந்த காணிகளிலேயே மீளக்குடியேற்றப்பட வேண்டும் என விடாப்பிடியாக உள்ளனர். இதனாலே அவர்களின் மீளக்குடியேற்றம் தொடர்பில் பிரச்சினை நிலவுகின்றது.

ஆணைக்குழு: சொந்த காணிகளில் அவர்கள் மீள்க்குடியேற்றப்படுவது அவர்களின் உரிமையல்லவா?

முதலமைச்சர்: உரிமை தான், அவர்களின் சொந்த காணிகளில் மீளக்குடியேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி தான் தலையிட வேண்டும்.

ஆணைக்குழு: நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது, அங்கு கொலை கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு உங்களால் தீர்வு காண முடியாதா?

முதலமைச்சர்: எல்லா மாகாணங்களிலும் இடம்பெறுவது போன்று எமது சில சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இப்பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம். (Pix by: Samantha Perera)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .